எந்தக் குடையும் நிழல்தரும் என நினைக்க வேண்டும்!

இயக்குநர் பாரதிராஜா!

அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் பேசினார் இயக்குநர் பாரதிராஜா.

அப்போது பேசிய அவர், ”நான் பாரம்பரிய பிடிப்புள்ள மனிதன். திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். வழக்கமான படைப்புகளில் இருந்து திசை மாறி புதுமையாக சொல்ல வேண்டும் என விரும்புவதுண்டு.

இதனை எனது புதிய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சாத்தியப்படுத்தி இருக்கிறார். அவருடைய படைப்புகளில் வீரியமும், புதுமையும் இருக்கும்.

காதல் கதைகளை.. காதல் உணர்வுகளை.. காட்சிப்படுத்துவதில் என்னை மன்னன் என்று சொல்வதுண்டு. காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. காதலிக்கவில்லை என்றால் கலைஞனாக முடியாது. காதல் என்பது இதுதான் என எந்த வரையறையும் இல்லை. காதல் என்பது மென்மையானது

எனக்கு வயதாவதில்லை. வயதைக் குறித்து நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இன்றும் நான் இளைஞனாகவும், இளமையாகவும் உணர்கிறேன்.

இந்த 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதனை தைரியமாக சொல்கிறேன். எனக்கு ஒன்பதாவது படிக்கும்போது ஒரு காதல் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தவுடன் இங்கும் மற்றொரு காதல் உண்டானது. அதன் பிறகு காலங்கள் மாற மாற நான்கு காதல்கள் ஏற்பட்டது.

நான்கு காதல்கள் இருக்கிறது என்கிறீர்களே..! இதில் எங்கே காதல்? என்று கேட்டால், இந்த குடைதான் நிழல் தரும் என கருதக்கூடாது.

நமக்கு எந்தக் குடையும் நிழல்தரும் என நினைக்க வேண்டும். நிழல் தரும் அந்த நான்கு குடைகளையும் என்னால் மறக்க இயலாது. ஏனெனில் காதல் இல்லாமல் இருக்க இயலாது. காதல் தவிர்க்க முடியாதது. அவசியமானது.

இசைஞானி இளையராஜா இந்த பாணிகளான படைப்புகளுக்கு எம் மாதிரியான இசையை வழங்குவார் என்று ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அவர் தன்னுடைய மாயாஜால வித்தை காட்டி என்னை அசத்திவிட்டார்” என்றார்.

Comments (0)
Add Comment