தாய் – தலையங்கம்
திண்டிவனத்தில் அண்மையில் தோண்டப்பட்ட குழியில் இறங்கிக் கழிவுநீரைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் மீது மண் சரிந்து அப்படியே உயிரிழந்திருக்கிறார்.
தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது பதைபதைக்கிறது. இது மாதிரி கழிவுநீரைச் சுத்திகரிக்கும் பணியில் எத்தனை மனிதர்கள் விஷ வாயு தாக்கிப் பரிதாபமாகப் பலியாகி இருக்கிறார்கள்.
சாக்கடைக் குழிகளுக்குள் இருந்து எத்தனை பேர் சடலங்களாகக் கழிவுகள் ஒட்டிய நிலையில் தூக்கப்பட்டிருக்கிறார்கள்.
கழிவுநீரை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று நீதிமன்றங்கள் பலமுறை கண்டித்துவிட்டன. இருந்தாலும் அதையும் மீறி மனிதர்கள் தான் அந்தப் பணியில் பயன்படுத்தப்படுகிறார்கள். உயிரிழக்கவும் செய்கிறார்கள்.
அண்மையில் புதுச்சேரிக்கு வந்த தேசியத் தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவரான வெங்கடேசன் சொல்லியிருக்கும் தகவல் மேலும் அதிர வைக்கிறது.
கழிவுநீரை அகற்றும் போது விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என்று சொல்லியிருக்கிற அவர் சில புள்ளிவிபரங்களையும் தெரிவித்திருக்கிறார்.
1993 ஆம் ஆண்டு துவங்கி இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 பேர் என்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இப்படி உயிரிழந்தவர்கள் 50 பேர் என்றும் தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியூட்டுகிறது.
குறிப்பாக சென்னை மாதிரியான மக்கள் தொகை அடர்த்தியாக வசிக்கும் பெரு நகரங்களில் தான் இம்மாதிரியான கழிவுநீர்க் குழாய்களில அடைப்பு ஏற்படுவது அதிகமாக நடக்கிறது.
இதனால் அந்தப் பகுதியே நாற்ற மயமாக மாறி, உள்ளாட்சி அமைப்புகள் அதற்கென இயந்திரங்களைப் பயன்படுத்திச் சரி செய்யாமல், தொழிலாளர்களைச் சுத்தப்படுத்தக் குழிக்குள் அனுப்புகின்றன.
அப்போது தான் விஷவாயு தாக்கிப் பலர் அனாதரவாக உயிரிழக்கும் அபாயங்கள் நடக்கின்றன. ஊடகங்களில் அது ஒரு நாளைய செய்தி. சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கோ அது வாழ்வின் இறுதிப் புள்ளியாகிவிடுகிறது.
விஷவாயு தாக்கி இவ்வளவு தொழிலாளர்கள் உயிரிழப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?
நீதிமன்றங்களின் தொடர் எச்சரிக்கைகளை மீறி எதனால் இந்த அளவுக்குத் தொழிலாளர்கள் கழிவுநீர் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உயிரை இழக்கிறார்கள்.
இம்மாதிரியான கொடுந்துயரங்களுக்கு எப்போது முடிவு காணப்போகிறோம்?