புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென் மாநிலங்களில் இருந்தும் உயர் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியானது.
இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தின.
இந்தச் சூழ்நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஏப்ரல் 16-ம் தேதி வெளியிடப்பட்ட சேவைக் கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.