‘உலகம் சுற்றும் வாலிப’னுக்கு பொன்விழா!

எம்.ஜி.ஆரின் கனவுப்படம் நனவான கதை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்பட பயணத்தில் மைல் கல்லாகவும், மாஸ்டர் பீசாகவும் திகழ்வது, அவரது கனவுப்படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

வெளியாகி 50 ஆண்டுகள் ஆன பின்னரும் உலகத்தமிழர்களால் ஆராதிக்கப்படும் அந்த காவியத்தை உருவாக்க மக்கள் திலகம், சந்தித்த சவால்கள், எதிர்கொண்ட சிக்கல்கள் ஆயிரமாயிரம்.

அதில் சில துளிகளை பார்க்கலாம்.

இன்றைய தினம் சில பிரமாண்ட இயக்குநர்களிடம் உதவியாளர்களே (அசிஸ்டண்ட் டைரக்டர்கள்) 25 பேர் இருக்கிறார்கள்.

தமிழ்த் திரை உலகைப் புரட்டிப்போட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றக் குழுவின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையே 25 தான் என்பதை நம்ப முடியவில்லை என்றாலும் அதுவே உண்மை.

எம்.ஜி.ஆர். – ஜானகி அம்மாள். நடிகர்கள் அசோகன், நாகேஷ், நடிகைகள் மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர் ப.நீலகண்டன் ’இதயம் பேசுகிறது’ மணியன் உள்ளிட்டோர் குழுவில் அடங்குவர்.

ஷுட்டிங் நடைபெற்ற ஜப்பான், ஹாங்காங், பாங்காக், சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் எல்லாம் எம்.ஜி.ஆர்.

எந்த ஓட்டலில் தங்கினாரோ அதே ஓட்டலில் தான், நடிகர்கள் உள்ளிட்ட அனைத்து டெக்னீஷியன்களும் தங்க வைக்கப்பட்டனர்.

படத்தின் உச்சக்கட்ட காட்சி ஜப்பானில் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘எக்ஸ்போ-70’ எனும் உலக கண்காட்சியில் படமாக்கப்பட்டது.

தினமும் 10 லட்சம் பேர் திரண்ட கண்காட்சியில் பாடல் ஒன்றையும், சில காட்சிகளையும் படமாக்கி இருந்தார் எம்.ஜி.ஆர்.

இந்தத் திரைப்பதிவுகளை அதுவரை இந்தியா சினிமா கண்டதில்லை, இனியும் காணப்போவதில்லை என்பது அந்த காட்சிகளில் ஒன்றிய ஒவ்வொருவரின் வாக்குமூலம்.

ஹாங்காக் துறைமுகப் பகுதியில் “தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’’ எனும் பாடல்காட்சி படமாக்கப்பட்டது. சுற்றிலும் தண்ணீர். அதன் நடுவில் விமான நிலையம்.

பாடல் படமாக்கப்பட்டுகொண்டிருக்கும் போது விமானங்கள் புறப்பட்டு வானில் பறந்து செல்வதையும், வானில் இருந்து விமான நிலையத்தில் இறங்குவதையும் பார்த்த எம்.ஜி.ஆருக்குள் ‘ஒரு ஸ்பார்க்’.

இயக்குநர் ப.நீலகண்டனை அழைத்தார்.

“நானும் சந்திரகலாவும்  விமானம் கிளம்பும்போது படகில்  நின்று பாடுகிறோம். அப்போது காமிராவை கீழே வைத்து ஷூட் பண்ணுங்க. கால்களுக்கு இடையே விமானம் பறப்பது போல் இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பு ஏற்படும்’’ என்றார்.

எம்.ஜி.ஆர் சொல்லியபடி படமானது. படகு, கடல், வானம் என மூன்று தளங்களையும் மூன்று காமிராக்கள் படம் பிடித்தன.

எம்.ஜி.ஆர். நினைத்த மாதிரியே அந்த விமான காட்சி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது.

நம்பியாரின் சிரத்தை:

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பூட்டும் ரகத்தை சேர்ந்தவை. கோரப் பல்லும், திகிலூட்டும் விழிகளுமாய் மதயானையை நினைவூட்டும் தோற்றத்துடன் காணப்படும் நம்பியார், எம்.ஜி.ஆருடன் மோதும் சண்டைக் காட்சி  படத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

தாய்லாந்து புத்தர் கோயிலின் உள்ளே சண்டை நடைபெறுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கோயிலின் உள்ளே சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கிடையாது. ஏன்? புகைப்படம் எடுக்கக்கூட அனுமதிப்பது இல்லை.

பிறகு எப்படி அந்த காட்சியை படமாக்கினார்கள்?

புகைப்படக்காரர் ஒருவர் எடுத்த புத்தர் கோயிலின் உள்புறத் தோற்றப் படங்களை ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவிடம் கொடுத்த எம்.ஜி.ஆர். அந்த கோயிலின் வனப்பு, விஸ்தாரம் போன்ற விஷயங்களை விவரித்தார்.

அதனை உள்வாங்கிக் கொண்ட அங்கமுத்து, சென்னை சத்யா ஸ்டூடியோவின் டி ஃபுளோரில், புத்தர் கோயிலை தத்ரூபமாக நிர்மானித்தார்.

நிஜமான புத்தர் கோயிலுக்கும், இந்த ‘செட்’டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அத்தனை தூரம் உயிரோட்டமாக அதனை வடிவமைத்திருந்தார் அங்கமுத்து.

இந்த சண்டைக் காட்சியைப் படமாக்க மட்டும் 20 நாட்கள் பிடித்தன. நம்பியாருக்கு மேக்கப் போடுவதற்கு அதிக நேரம் ஆனது. நம்பியார் உடல் வழவழப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் அவருக்கு ‘ஷேவிங்’ செய்யப்பட்டு, அதன்பின் உடல் முழுவதும் ஆலிவ் எண்ணை பூசப்படும். நம்பியாருக்கு பல் ’செட்டப்’ செய்வதற்கென்றே தனி டாக்டர் அமர்த்தப்பட்டார்.

இந்த சண்டைக் காட்சிக்காக நம்பியார் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அதனால் தான் இன்றளவும், அந்தக் காட்சி பேசப்படுகிறது.

சத்யா ஸ்டூடியோவில் அரங்கம்

“அவள் ஒரு நவரச நாடகம்’’ பாடல் காட்சி வெளிநாட்டில் எடுக்கப்பட்டாலும், சில ‘பேட்ச் அப்’ காட்சிகள் சத்யா ஸ்டூடியோவில் தான் உருவானது.

இதற்காக சத்யா ஸ்டூடியோவில் 15 அடி நீளம் 4 அடி அகலத்தில் சிமெண்ட் தொட்டி கட்டி ஷூட்டிங் நடத்தினர்.

கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆருக்கு விஷ ஊசி போடுவதற்கு அசோகனும், வி.கோபாலகிருஷ்ணனும் துரத்துவார்கள். மூவருமே காலில் ஸ்கேட்டிங் கட்டிக் கொண்டு சுழன்றோடும் சேசிங் காட்சியும் சத்யா ஸ்டூடியோவில் 20 நாட்கள் படமாக்கப்பட்டன.

நடிக்கத் தயங்கிய நாகேஷ்

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் தன்னோடு நாகேஷும் உலகம் சுற்ற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

அந்த நேரத்தில் நாகேஷ் படுபிஸி. அவர் கைவசம் நிறைய படங்கள் இருந்தன. வெளிநாடுகளுக்கு போய் விட்டால் அந்தப் படங்கள் முடங்கிவிடும் என்பதால், எம்.ஜி.ஆர். வேண்டுகோளை முதலில் அவர் ஏற்கவில்லை.

“இந்தப் படத்தில் நீ நடிக்கிறாய்” என அன்புக்கட்டளைப் போட்டுவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டார் எம்.ஜி.ஆர்.

நாகேஷ் வீட்டில் எந்த நிகழ்வு என்றாலும் முதல் ஆளாகப் போய் நிற்பவர் எம்.ஜி.ஆர். நாகேஷின் மூன்று மகன்கள் பிறந்தநாளுக்கும் எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்தி பரிசு வழங்கியுள்ளார்.

எனவே அவரது அன்புக்கு பணிந்தார் நாகேஷ்.

ஹாங்காக்கில், இந்தப் படத்தின் ஷுட்டிங் நடந்தபோது நாகேஷ் பிறந்தநாள் வந்தது. அதனை விமர்சிகையாகக் கொண்டாடினார் எம்.ஜி.ஆர். படக்குழுவுக்கு விருந்து வைத்ததோடு, நாகேஷுக்கு வைர மோதிரம் வழங்கினார்.

எம்.ஜி.ஆர். வளர்த்த நாய்கள்:

சிங்கப்பூரில் உள்ள டைகர் பாம் கார்டனில் ‘’சிக்கு மங்கு சிக்கு மங்கு” பாடல் காட்சி படமானது. அதில் நடித்த குழந்தைகள் எல்லாம் பணக்கார வீட்டுக் குழந்தைகள். பாடல் காட்சி எடுத்து முடிந்ததும், பெற்றோர் கார்களில் தங்கள் பிள்ளைகளை அழைத்துச்  செல்ல வந்திருந்தனர்.

குழந்தைகள் வீட்டு முகவரியை எம்.ஜி.ஆர். வாங்கிக் கொண்டார்.

ஏன்? என யூனிட் ஆட்களுக்குத் தெரியவில்லை. மறுநாள் காலை எல்லோரது வீடுகளுக்கும் விலை உயர்ந்த பொம்மைகளை அனுப்பி வைத்தார் மக்கள் திலகம்.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். வளர்த்த இரண்டு உயர் ரக நாய்கள் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தகவல் தெரியுமா?

எம்.ஜி.ஆரிடம் இருக்கும் கடிகாரத்தை அபகரிக்க அவர் தங்கி இருக்கும் இடத்துக்கு மனோகர் அத்துமீறி செல்வார். அப்போது 2 நாய்களை உடன் அழைத்து வருவார்.

“பத்து பயில்வானும் சரி, இந்த நாயும் சரி” என சொல்லி விட்டு, அந்த நாய்களை ஏவுவார் மனோகர். நாய்களுக்கு “டாடா’’ காட்டிவிட்டு எம்.ஜி.ஆர். சிட்டாய்ப் பறந்து விடுவார். அந்த நாய்கள் எம்.ஜி.ஆர் வளர்த்த நாய்கள்.

எதிர்கொண்ட சிக்கல்கள்:

பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி 72 ஆயிரம் அடிகள் வரை படம் பிடித்து சென்னைக்கு திரும்பி இருந்தார் எம்.ஜி.ஆர்.

’’முழுப்படத்தையும் கொளுத்தி விடுவோம்” என அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இதனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஜெமினி ஸ்டூடியோவில் இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வீட்டுக்குச் செல்லாமல் இரண்டு நாட்கள் ஸ்டூடியோவிலேயே இருந்து எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளை நேரடியாக கவனித்தார் எம்.ஜி.ஆர்.

முழுப்படத்தையும்  பார்த்த பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டார். அச்சுறுத்தல் இருந்ததால், படச்சுருளை சென்னையில் வைத்திருக்க அவர் மனம் ஒப்பவில்லை.

மும்பை கொண்டு செல்லப்பட்டு, அங்கு ராஜ்கபூருக்கு சொந்தமான ஆர்.கே. ஸ்டூடியோவில் படச்சுருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

படத்தை வெளியிடுவதற்கும் ஆயிரம் சிக்கல்கள். சில கெடுபிடிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை.

உலகம் சுற்றும் வாலிபன் சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் ரிசர்வேஷனின் போதே 100 காட்சிகளுக்கு அரங்கு நிறைந்தது.

இதற்கு முன்பு, தமிழில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன் தான் வசூலில் சாதனை படைத்த படமாக இருந்தது. அதனை முறியடித்தது உலகம் சுற்றும் வாலிபன்.

தி.மு.க. பிரமுகர் மதுரை முத்து “இந்தப்படம் ரிலீஸ் ஆனால் நான் சேலை கட்டிக் கொள்கிறேன்” என சவால் விடுத்தார். தமிழகம் முழுவதும் உலகம் சுற்றும் வாலிபன் புதிய வரலாற்றை உருவாக்கியது.

சவால்விட்ட முத்து பின்னாட்களில் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.ஜி.ஆரை தலைவராக ஏற்றுகொண்டது தனிக்கதை.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment