தேர்தல் ஆணையம் அறிமுகம்
கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்க அனுமதிப்பது தான் அந்த புதிய வசதி. சோதனை முறையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தத் தேர்தலில் பெங்களூருவில் மாநில தலைமைத் தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் அரண்மனை சாலையில் உள்ள அரசு ராமநாராயண் செல்லாராம் கல்லூரி வாக்குச்சாவடியில் அறை எண் 2-ல் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு வாக்களிக்கும் வாக்காளர்கள், தங்களின் செல்போனில் ‘சுனாவனா’ (தேர்தல்) செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு ‘ஓ.டி.பி.’ ரகசிய எண் வரும். அதனை உள்ளீடு செய்து, வாக்காளர் தனது செல்பி புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்த பிறகு அந்த வாக்காளர், வாக்குச்சாவடி சென்று முகம் அடையாளம் காணும் ஸ்கேனர் கருவி முன்பு நிற்க வேண்டும்.
அந்த ஸ்கேனர் கருவி புகைப்படம், தேர்தல் ஆணைய விவரங்களுடன் பொருந்தினால், அவர் எந்த ஆவணத்தையும் காட்டாமல் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.
இந்த வசதியால் கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படுவதுடன் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் ஏற்படும் காலவிரயமும் தவிர்க்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.