நான் மிகச் சிறந்த நடிகன் கிடையாது!

ஒரு பத்திரிகையாளரின் பிறந்த நாள் சேதி

திரைப்பட பத்திரிகையாளராகப் பணிபுரியும் கயல் தேவராஜ், தன் பிறந்த நாளன்று சுவையான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதை நீங்களும் படித்துப் பாருங்கள்…!

வேலூரில் 100ம் நம்பர் பீடியை, ஒருநாளில் 2 ஆயிரம் வரை சுற்றி, அதில் கிடைக்கும் சொற்ப பணத்தைக் கொண்டு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவன் நான்.

மிகச்சிறந்த எழுத்தாளன் கிடையாது. ஆங்கிலம் சரளமாகத் தெரியாது. கல்லூரி வாசலை மிதித்தது கிடையாது.

மிகச்சிறந்த நடிகனும் கிடையாது. அதிக பண வசதி படைத்தவனும் இல்லை.

ஆனால், ஒரே பத்திரிகையில் கிடைக்கும் சம்பளத்தில் வாழ வழி செய்தேன். மகனை என்ஜினீயராக்கிவிட்டேன். மகளை பல் டாக்டருக்குப் படிக்கவைக்கிறேன்.

சம்பளம் கிடைக்கிறதோ இல்லையோ, என்னை மதித்து அழைக்கும் படத்தில் மட்டும் நடிக்கிறேன். எங்கேயும் பத்திரிகையின் பெயரை நான் பயன்படுத்துவது இல்லை.

33 வருட திரைப் பத்திரிகையாளர் பணியில் நானாகவே நிறைவை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமே என் புத்திசாலித்தனம்.

எனக்குப் பிறகு வந்தவர்கள் எவ்வளவு தூரம் முன்னேறினார்கள் என்று பார்த்து வியப்பதும் இல்லை, பொறாமைப்படுவதும் இல்லை.

உழைப்பு, திறமை ஆகியவற்றை விட சினிமா, அரசியல், பத்திரிகை போன்ற துறைகளில் ஜெயிக்க அதிர்ஷ்டம் மட்டுமே கைகொடுக்கும் என்று பலமாக நம்புவன் நான். எனவே, அதிர்ஷ்டம் இனி என் வாழ்க்கையில் அமைவதும், அமையாததும் அது இஷ்டம்.

கூடுமானவரையில் என்னிடம் நியாயமான தகவல் உதவியோ அல்லது திரையுலகினரின் போன் நம்பர்களையோ கேட்டால் வழங்க மறுப்பதில்லை.

இன்று எனது 33 வருட பத்திரிகைப் பணியை நிறைவு செய்து, 34வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

13 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் முக்கியத்துவம் இல்லாத மற்றும் ஓரளவு சிறிய கேரக்டரில் மட்டுமே நடித்துள்ளேன்.

55 வயது நிறைந்து 56ல் அடியெடுத்து வைத்துள்ளேன். எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment