குலசாமி – 80களில் வெளியாகியிருக்க வேண்டிய படம்!

ஒரு திரைப்படம் பார்க்கும்போது வேறு சிந்தனை எதுவும் அண்டக் கூடாது. இயக்குனர் முன்வைக்கும் உலகத்தைவிட்டு ஒருமுறை பார்வையை விலக்கிவிட்டால், அதன்பிறகு அதனைக் கிண்டலடிக்கவே தோன்றும்.

அந்த சூட்சமத்தைத் தெரிந்துகொண்டவர்கள் என்று மாபெரும் ஜாம்பவான்களை கூடக் கைகாட்ட முடியாது. ஏன், ஒரு படம் தயாராகும்போது அதில் பணியாற்றுபவர்களால் கூட அந்த உறுதியைத் தர முடியாது.

’அதற்கு நாங்கள் மட்டும் விதிவிலக்கா’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறது ‘குலசாமி’ குழு. என்ன, அதனைப் பேட்டியாகத் தராமல் படைப்பில் காட்டியிருப்பதுதான் கொஞ்சம் சங்கடமான விஷயம்.

கதைகளாகும் செய்திகள்!

பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வஞ்சகர்களைக் கொன்று தீர்க்க வேண்டுமென்று துடிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் சூரசங்கு (விமல்). காரணம், மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த அவரது தங்கை அப்படியொரு நிலைமைக்கு ஆளாகி மரணமடைந்ததுதான்.

ஆனால், அந்த அசம்பாவிதத்தை நிகழ்த்தியவர் யார் என்பது மட்டும் அவருக்குத் தெரியவில்லை. அதனைக் கண்டறிய, ஊரில் எங்கு தீங்கு நேர்ந்தாலும் முதல் ஆளாகக் களமிறங்குகிறார்.

இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலரை விபச்சாரத்திற்குத் தள்ள முயன்ற ஒரு பேராசிரியையின் ஆடியோ ஊடகங்களில் வெளியாகிறது. அதன் பின்னணியில் ஒரு மாஃபியா செயல்படுகிறது.

அந்த ஆடியோ வெளியாகக் காரணமாக இருந்த மாணவியை சம்பந்தப்பட்ட கும்பல் கொல்ல முயல்கிறது. சூரசங்கு அவர்களை வெற்றி கொண்டாரா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘குலசாமி’.

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் அத்துமீறல், அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை கைது போன்ற செய்திகளைக் கொண்டு ஒரு கதையைத் தயார் செய்திருக்கிறார் இயக்குனர் ஷரவணசக்தி. என்ன, அதனைக் காட்சிகளாக வடித்திருக்கும் விதம் தான் ‘இப்பவே கண்ணக் கட்டுதே’ என்று நம்மைக் கதறச் செய்கிறது.

முடியலடா சாமி!

எண்பதுகளில் வெளியான பல படங்களில் இந்த ‘பழிக்குப் பழி’ கருவைக் காண முடியும். தமிழ் திரையுலகில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நுழைவுக்குப் பிறகு, ‘சட்டம் எல்லாம் எங்களைக் கட்டுப்படுத்தாது’ என்று திரையில் நாயகர்களே தீர்ப்பு எழுதும் வழக்கமும் சேர்ந்துகொண்டது.

அந்த படங்களில் பொதுவாகச் சில அம்சங்கள் இருக்கும். தாய், சகோதரன், சகோதரி மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சென்டிமெண்ட், அமைதியான வாழ்வைக் கலைத்துப் போடும் ஒரு குற்றம், அதற்காகப் பழி வாங்கத் துடிக்கும் நாயகன், அடையாளத்தை மறைக்கும் நாயகனுக்கு அடைக்கலம் தரும் சில மனிதர்கள், கண் முன்னே திரியும் நாயகனைக் கண்டுகொள்ளாமல் திரியும் வில்லன் கும்பல் என்று அந்த பட்டியல் பெரியது.

கொஞ்சம் கூட கோர்வையற்ற முறையில் நகரும் காட்சிகளைக் கொண்டு கதை சொல்லும் போக்கும் அவற்றில் இருக்கும்.

அச்சுப்பிசகாமல் அத்தனையும் ‘குலசாமி’யில் நிறைந்து கிடக்கிறது. அதனால், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ‘முடியலடா சாமி’ என்று நெளிய ஆரம்பிக்கிறோம்.

ஆரம்பத்திலேயே அடித்து துவைத்துவிடுவதால், மேற்கொண்டு கதை நகரும் போக்கு பற்றிக் குறைகள் சொல்வது அர்த்தமற்றதாகிறது.

வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவும், மகாலிங்கத்தின் பின்னணி இசையும் பழைய படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன.

பாடல்களைக் கேட்டதும், ‘அட ஆமால்ல’ என்று உடனடியாகத் தோன்றும். அது போதாதென்று கதையைக் கோர்வையாகச் சொல்லத் தவறியிருக்கிறது கோபி கிருஷ்ணனின் படத்தொகுப்பு.

எல்லாவற்றுக்கும் மேலாக, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி தொடங்கியதும் முடிந்துவிடுகிறது; அப்போதுதான், அது முழுதாகப் படமாக்கப்படவில்லை என்பது பிடிபடுகிறது.

அதன் பின்னணியில் பல ‘பிராக்டிகல் பிரச்சனைகள்’ இருக்கக் கூடும்; இயக்குனர் ஷரவணசக்தியோ, படக்குழுவினரோ பேசினால் தான் விவரங்கள் வெளிவரும்.

திரையில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் விமல், மாலை மரியாதையுடன் தன் முகம் காட்டுகிறார். ஆனால், அவரது பாத்திரப் படைப்புக்கான ‘ஜஸ்டிபிகேஷன்’ அதன்பிறகு வரும் எந்தக் காட்சியிலும் தென்படவில்லை.

‘வாகை சூட வா’, ‘களவாணி’ படங்களை டிவியில் பார்க்க நேரிடும்போது, ‘எப்படியிருந்த விமல் இப்படியாயிட்டாரே’ என்ற நினைப்பு தான் மேலெழுகிறது.

‘தாராளபிரபு’வில் தன் பாத்திரத்தில் நாயகி தான்யா ஹோப் காட்டிய ஈடுபாட்டை பார்த்த காரணத்தால், இப்படத்தில் அவரது பாத்திரம் பற்றிச் சொல்ல ஏதுமில்லை. வினோதினி வைத்தியநாதன் பேராசிரியையாக நடித்திருக்கும் காட்சிகள் வெகுஇயல்பாகத் தெரிகின்றன.

படத்தில் போஸ் வெங்கட் மட்டும் தெரிந்த முகமாக இருக்க, திரையில் உலவும் பலரும் புதுமுகங்களாகத் தெரிகின்றனர்.

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட்டும் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்.

அவர் தனது ஒரிஜினல் பெயரோடு இடம்பெற்றிருப்பதால், அந்த காட்சி கூட சர்ச்சையைக் கிளப்பும் வகையிலேயே உள்ளது. மகாநதி சங்கர் கூட இறுதிக்காட்சியில் ஒரேயொரு ஷாட்டில் தலைகாட்டியிருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து நாயகனின் தங்கையாகவும், காவேரி எனும் பாத்திரத்திலும் இரு பெண்கள் நடித்துள்ளனர். அவர்களுக்கான இடமும் திரையில் உரிய முறையில் தரப்படவில்லை.

இன்னும் வேணுமா?

திரையில் ஒரு படைப்பு நேர்த்தியாகத் தெரிய வேண்டுமென்பதற்காகப் பலமுறை படம்பிடிக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். ஒரு சிலர் மட்டுமே, கனகச்சிதமாகத் திட்டமிட்டு தேவையானதை மட்டும் படம்பிடிக்கும் வித்தை அறிந்தவர்களாக விளங்குகின்றனர்.

இரண்டுமே வாய்க்காதபோது, திரையில் தெரியும் காட்சிகள் அபத்தமாகத் தான் தெரியும். ‘குலசாமி’யும் அந்த வரிசையில் சேர்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், படம் பார்க்க வருபவர்களிடம் ‘இந்த காரணங்கள் போதுமா இன்னும் வேணுமா’ என்று கேட்க முடியாது.

ஒரு காட்சியை எழுதும்போதும் படம்பிடிக்கும்போதும் அது ரசிக்கப்படுமா இல்லையா என்பதை ஓரளவுக்குக் கணித்துவிட முடியும்.

குறைந்தபட்சமாக அது ‘க்ளிஷே’வாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியும். அந்த பக்கமே தலையைத் திருப்பாமல், தியேட்டருக்கு நம்மை வரவழைத்திருக்கிறது ‘குலசாமி’ குழு.

வசனம் என்ற இடத்திற்கு நேரே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்று வருவதும் அதற்கான காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல படங்களில் நாம் ரசித்த வசனங்களே வேறு தோற்றத்தில் இதில் கேட்கக் கிடைக்கின்றன.

ஒருகாலத்தில் நட்புக்காக நடித்துத் தந்தவர், இப்போது வெறுமனே தனது பெயரை மட்டும் டைட்டிலுக்கு தந்திருக்கிறார். விஜய் சேதுபதிக்குத்தான் எத்தனை விதமான சோதனைகள்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment