அதிகாரத்துக்கு அஞ்சாத நேர்மை!

டிராபிக் ராமசாமி (ஏப்ரல் 1, 1934 – மே 4, 2021)

தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமி என்ற பெயரைக் கேட்டதும் அரசியல் அதிகாரங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பொதுநல வழக்குகள்தான் நினைவுக்கு வரும்.

வெள்ளைச் சட்டை, காக்கி பேண்டு, பையில் நாலைந்து பேனாக்கள், கையில் ஃபைல் கட்டுகள் என அவரது தோற்றம் கண் முன் நிற்கிறது.

இன்று அவர் இல்லை. சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமசாமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 4 ஆம் தேதியன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

டிராபிக் ராமசாமியின் கல்வி பன்னிரண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார்.

ஊர்க்காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். செய்யாற்றைச் சொந்த ஊராகக் கொண்ட அவர், ஆரம்பக் காலத்தில் சென்னை பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல் துறையினருக்கு உதவியாக இருந்தார்.

அதனால் அவர் பெயருக்கு முன்னால் டிராபிக் என்ற சிறப்புப் பெயர் ஒட்டிக்கொண்டது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த பொதுநல வழக்குகளின் மூலம் பல பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல தகவல்கள் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என்று போராடிவந்தார் டிராபிக் ராமசாமி.

ஒரு காலத்தில் சென்னை சாலைகளில் எஞ்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகள் சீறிக்கொண்டு பாயும். அவர் தொடர்ந்த வழக்கு காரணமாகவே அது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துவந்த பிளக்ஸ், பேனர் காலச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவரும் டிராபிக் ராமசாமியே.

சென்னையில் சட்டத்திற்குப் புறம்பாக வாகன நிறுத்துமிட வசதி இல்லாமல் கட்டப்பட்ட பல கட்டடங்களுக்கு எதிராகத் தொடர்ந்த பொதுநல வழக்குகளால் அவர் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

ஆனால் உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்புகளின் மூலம் மாற்றம் நிகழ்ந்தது.
பெரு முதலாளிகளுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடுத்தார். பல கட்டடங்களை இடிக்கவைத்தார்.

கட்டடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக அவர் வழிவகுத்தார். சில வழக்குகளுக்கு அவரே ஒரு வழக்கறிஞராக வாதாடிய அனுபவமும் நேரிட்டது.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தனித்து நின்றார்.
எளிய மனிதராக இருந்தாலும் உயர் நோக்கங்களுடன் செயல்பட்டவர் டிராபிக் ராமசாமி.

சட்டத்தை மீறுபவர் யாராக இருந்தாலும் அஞ்சாமல் எதிர்த்துக் குரல் கொடுத்த துணிச்சல் மனிதர் அவர்.

ஒரு பொதுநலச் சேவகராக வாழ்நாளின் இறுதிவரையில் வாழ்ந்து மறைந்திருக்கிற அற்புத மனிதர் டிராபிக் ராமசாமி.

எப்போதும் அவருடைய பொதுநல வழக்குகளால் தமிழ் மக்களால் நினைக்கப்படுவார்.

  • சங்கத்தமிழ்
Comments (0)
Add Comment