ஜூப்ளி – பிரமாண்டப் படைப்புக்கான உதாரணம்!

கொஞ்சம் காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்போதெல்லாம், நமக்கு உதவி செய்வது திரைப்படங்கள் தான்.

இப்போது நாம் காணும் இடங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்தது என்று தெரிய உதவியாக இருப்பது அவைதான்.

அதனாலேயே, அவை உடனடியாக நம் கவனத்தைப் பெறுகின்றன, பிரமிக்க வைக்கின்றன, அப்படிப்பட்ட திரைக்கதைகள் ‘கிளாசிக்’ அந்தஸ்தைப் பெறுகின்றன.

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஜூப்ளி’ வெப் சீரிஸ் அத்தகையதுதான்; பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதுவொரு கிளாசிக் படைப்பென்பது புரிந்து விடுகிறது.

நட்சத்திரங்களின் கதைகள்!

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு, பம்பாய் நகரில் ராய் டாக்கீஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் & ஸ்டூடியோ இயங்கி வருகிறது.

அதனை நடத்திவரும் ஸ்ரீகாந்த் ராய் (பிரசோன்ஜித் சாட்டர்ஜி), இந்தி சினிமா செல்லும் திசையைத் தீர்மானிக்கும் ஆற்றல்மிக்கவராக விளங்குகிறார்.

ராய் டாக்கீஸில் ஸ்ரீகாந்த் ராய்க்கு இணையான முக்கியத்துவம் அவரது மனைவி சுமித்ரா குமாரிக்கு (அதிதி ராவ் ஹைத்ரி) உண்டு.

நிதி தொடர்பான முடிவுகளைக் கையாள்பவராக, அவரே இருந்து வருகிறார்.

அந்த நேரத்தில், மதன் குமார் என்ற பெயரில் ஒரு நடிகரை ராய் டாக்கீஸ் அறிமுகப்படுத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

திறமைமிக்கப் பல நடிகர்கள், அதற்காக நடிப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களில் ஜம்ஷெத் கான் (நந்திஷ் சந்து) என்பவர் அதீத நடிப்பாற்றல் கொண்டவராக இருக்கிறார்.

ஜம்ஷெத் கானை மதன் குமாராக அறிவிக்கலாம் என்று ராய் முடிவு செய்கிறார்; அதற்காக, சுமித்ராவும் இதர அதிகாரிகளும் அவரை லக்னோவில் நேரில் சந்தித்து ஒப்பந்தம் குறித்து பேசுகின்றனர்.

ஆனால், ஒப்பந்தத்தில் இருக்கும் சில நிபந்தனைகளை ஏற்க மறுக்கிறார் ஜம்ஷெத். சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நாடகங்களில் நடிக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.

ஜம்ஷெத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கும் சுமித்ரா, ஒருகட்டத்தில் அவர் மீது காதல்வயப்படுகிறார்; அதனை அவரும் ஏற்கிறார். இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்கின்றனர்.

உளவு நிறுவனம் மூலமாக அவர்கள் இருவரது செயல்பாடுகளை அறியும் ஸ்ரீகாந்த் ராய் கொந்தளிக்கிறார்; அதேநேரத்தில், மதன்குமாராக ஜம்ஷெத் நடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அது தினசரிகளில் செய்தியாகவும் வெளியாகிறது.

லக்னோவில் இருக்கும் தனது மனைவியையும் ஜம்ஷெத்தையும் அழைத்துவர, தனது ஸ்டூடியோ லேப்பில் வேலை செய்யும் பினோத் தாஸ் (அபர்ஷக்தி குரானா) என்பவரை அனுப்புகிறார் ராய்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் ஜம்ஷெத்தை சந்திக்கிறார் பினோத். வெறுமனே ராய் டாக்கீஸின் மதன்குமாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.

அந்த நேரத்தில், கராச்சியில் கன்னா தியேட்டர்ஸ் எனும் நாடக கம்பெனியை நடத்திவரும் ஜெய் கன்னா (சிதாந்த் குப்தா) ஜம்ஷெத்தை தனது நாடகத்தில் நடிக்க அழைக்கிறார். கராச்சி செல்ல இரண்டு டிக்கெட்களும் வாங்குகிறார்.

ஜம்ஷெத் சொன்ன காரணத்தால், நிலோஃபர் (வாமிகா கபி) எனும் விலைமாதுவைச் சந்திக்கிறார் ஜெய். பார்த்த மாத்திரத்தில், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால், நிலோபர் ஜெய்யின் காதலை ஏற்கத் தயாராக இல்லை.

ஒருபக்கம் ராய் டாக்கீஸை உதறிவிட்டு ஜம்ஷெத் உடன் கராச்சி செல்லத் தயாராகிறார் சுமித்ரா. இன்னொரு பக்கம் ஜெய் உடன் ஜம்ஷெத் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் பினோத். அவர்களது எண்ணங்களைச் சீர்குலைக்கும் வகையில், லக்னோவில் பிரிவினைக் கலவரம் வெடிக்கிறது.

இந்தியா சுதந்திரமடைவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக, இந்த சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தில் ஜம்ஷெத் கொலை செய்யப்படுகிறார்; கராச்சியில் ஜெய்யின் சொத்துகள் சூறையாடப்படுகின்றன; தன் காதலன் என்னவானான் என்பது தெரியாமலேயே ராய் டாக்கீஸில் ஒவ்வொரு நாட்களையும் கடத்தி வருகிறார் சுமித்ரா; அதற்குள், மதன் குமார் என்ற பெயரில் பினோத் தாஸ் நாயகனாக அறிமுகமாகிறார்.

நடந்த உண்மை எப்போது வெட்டவெளிச்சமாகிறது? அந்த சம்பவம் எப்படியெல்லாம் கதை மாந்தர்களின் வாழ்வைத் தடம் புரட்டிப் போடுகிறது என்று சொல்கிறது ‘ஜூப்ளி’.

உண்மையைச் சொன்னால், மேலே சொன்ன கதை முதல் அத்தியாயத்தில் இடம்பெறுவதுதான்.

அதன்பிறகு நீளும் 9 அத்தியாயங்களும் இந்திய சினிமாவில் கோலோச்சிய எண்ணற்ற நட்சத்திரங்களின் வாழ்வைத் துணுக்களவேனும் பிரதிபலிப்பதாகவே விளங்குகிறது.

அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் இந்திய அரசு மட்டுமல்லாமல் அமெரிக்க, ரஷ்ய நாட்டுப் பிரதிநிதிகளின் தலையீடும் இருப்பதாகச் சொல்கிறது ‘ஜூப்ளி’.

கண் கவர் கலையம்சம்!

அண்ணாந்து பார்க்க வைக்கும் உருவங்களே பிரமாண்டம் என்று மக்களை நம்ப வைக்கும் சினிமாவுலகில், பிரமாண்டம் என்றால் என்னவென்ற அளவுகோலுக்கு உதாரணமாக விளங்குகிறது ‘ஜூப்ளி’.

இந்த கதையை, கதாபாத்திரங்களை, அவற்றின் பின்னிருக்கும் சொல்லப்படாத உணர்வுகளை உள்வாங்குகிறபோது நம் மனதுக்குள் எழும் கற்பனைக்கோட்டை இதில் சொல்லப்பட்டிருக்கும் ராய் டாக்கீஸை விடவும் மிகப்பெரியது, பிரமாண்டமானது.

இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானேவும் சௌமிக் சென்னும் உருவாக்கிய அடிப்படைக் கதையை வைத்துக்கொண்டு, பிரமிக்க வைக்கும் கோபுரங்களை உருவாக்கியிருக்கிறார் திரைக்கதையாசிரியர் அதுல் சபர்வால்.

ஏனென்றால், முதல் அத்தியாயத்தில் நமக்குக் கிடைக்கும் தகவல்களும் கதாபாத்திர குணாதிசயங்களும்தான் இறுதிவரை நெடுநதியாகப் பிரவாகிக்கின்றன.

‘ஜூப்ளி’யின் பெரும்பலம் ஒளிப்பதிவாளர் பிரதீக் ஷா. ஒரு சினிமா படப்பிடிப்புக்குள் நுழைந்தது போலவே, ஒவ்வொரு பிரேமிலும் பல வண்ணங்களையும் ஒளிச்செறிவையும் நிறைத்திருக்கிறார்.

பழைய படங்களில் வருவது போலவே, அதிகமாக ட்ராலி, கிரேன் ஷாட்களை பார்க்கும் உணர்வை உண்டாக்கியிருப்பது அருமை.

கண்கவர் கலையம்சங்களே இப்படைப்பின் இன்னொரு அடையாளம். ஒளிப்பதிவுக்கு ஏற்ற வகையில் அரங்கங்களை நிர்மாணித்து, கதையில் வரும் களங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டிருக்கும் அபர்ணா சுத், முகுந்த் குப்தா மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய கலை இயக்குனர்கள்.

விஎஃப்எக்ஸ் கலைஞர்களின் பங்களிப்பு, இவர்களது கற்பனையை முழுமையானதாக மாற்றுகிறது.

கதையோட்டத்திற்கு நெருக்கமாகப் பார்வையாளர்களைக் கொண்டு வரும் ஷாட்களை மட்டுமே கோர்த்திருக்கிறது ஆர்த்தி பஜாஜின் படத்தொகுப்பு.

அதேபோல, காட்சியோட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் அலோக்நந்தா தாஸ்குப்தாவின் பின்னணி இசையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அமித் திரிவேதியின் இசையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது ஒரு பாடலாவது இருக்கிறது. அவை, அப்படியே ராஜ்கபூர், தேவ் ஆனந்த் காலத்து திரையிசையைப் பிரதிபலிக்கின்றன, விமர்சிக்கின்றன.

இன்னும் காஸ்ட்யூம் டிசைனர் ஸ்ருதி கபூர், ஒலி வடிவமைப்பாளர்கள், விஎஃப்எக்ஸ் பணியாளர்கள் என்று பலரது கூட்டுழைப்பு இதில் கலந்திருக்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை, யாரைச் சொல்வது அல்லது யாரைத் தவிர்ப்பது என்று தவிக்கும் மனநிலையை உண்டாக்குகிறது ‘ஜூப்ளி’.

இந்த கதையே, ஜாம்ஷெத் கானாக வரும் நந்திஷ் சந்துவை ஆதாரமாகக் கொண்டது. அவருக்கான ‘ஸ்கீரின் டெஸ்ட்’ காட்சியொன்றே, அவர் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பதைச் சொல்லிவிடுகிறது.

இப்படைப்பில் பெரும்பாலான இடத்தை ராய் ஆக வரும் பிரசோன்ஜித்தும், பினோத் தாஸ் ஆக வரும் அபர்சக்தியும் பெறுகின்றனர். இருவரது நடிப்பு செயற்கைத் தனமாகத் தெரிய, எண்பதாண்டுகளுக்கு முந்தைய இந்தி சினிமா ட்ரெண்டும் ஒரு காரணம்.

அவர்களை ஒப்பிடும்போது, ஜெய் கன்னாவாக வரும் சிதாந்த் குப்தாவுக்கு முக்கியத்துவம் குறைவு. ஆனால், அவரது பாத்திரமே எளிதாக பார்வையாளர்களைக் கவரும் வகையிலானது.

இந்நால்வருக்கு இணையான இடம், பைனான்சியர் ஜம்ஷெர் சிங் வாலியாவாக வரும் ராம் கபூருக்கு உண்டு.

ஆனால், ‘ஜூப்ளி’யில் ஆண்களை விட பெண் பாத்திரங்களே பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை; சினிமாவின் வளர்ச்சி மீதும், அவ்வுலகம் இயங்கும் விதம் மீதும் விமர்சனங்களை முன்வைப்பவை.

அதிதி ராவின் சுமித்ரா பாத்திரத்திற்கும், வாமிகா கபியின் நிலோஃபர் பாத்திரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. ‘ஜூப்ளி’யின் முடிவு அதைத்தான் சொல்லும்.

இரு பாத்திரங்களுமே மேட்டிமைத்தனம் மிகுந்த பெண்மையைப் பிரதிபலிப்பவை; அதேநேரத்தில், ஆண்களை நம்பிப் பாதிப்புக்குள்ளாகும் நிலைமையை எதிர்கொள்பவை.

அதிதியின் நடிப்பு மென்சோகத்தோடும், கம்பீரத்தோடும், சொல்லவியலா ஆற்றாமையோடும் இப்படைப்பு முழுக்க வலம் வந்திருப்பது அபாரம்.

அவருக்கு இணையாக, தெனாவெட்டான பெண்ணாகத் தோன்றும் வாமிகாவின் நடிப்பு இன்றைய இளம்பெண்களுக்குப் பிடித்தமானதாகத் தோன்றலாம். இவர், தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

இவர்களோடு ஸ்வேதா பாசு பிரசாத், சுஹானி போப்லி போன்றோரது நடிப்பும் நம் கவனத்தை ஈர்க்கிறது.

மீதமுள்ள தடங்கள்!

கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ ஊர்களில் எத்தனையோ திரையரங்குகள் இடிக்கப்பட்டு, அந்த இடங்களெல்லாம் குடோன்களாகவும் கல்யாண மண்டபங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் உருமாறியிருக்கின்றன. அதற்கு இணையாக, பல்வேறு ஸ்டூடியோக்களும் நிறம் மாறியிருக்கின்றன.

அறுபது எழுபதுகள் மட்டுமல்லாமல், எண்பதுகளில் இயங்கிய படப்பிடிப்பு அரங்குகள், தளங்கள் இன்று இல்லை. அதேநேரத்தில் புதிதாக ஸ்டூடியோக்களும் படப்பிடிப்புக்கான பங்களாக்களும் மல்டிப்ளெக்ஸ்களும் கட்டப்படுவதும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இவற்றைக் காணும் ஒருவருக்கு, திரையுலகில் எதுவுமே நிலையானதல்ல என்றே தோன்றும். ‘ஜூப்ளி’யும் அதையே சொல்கிறது.

ஆனால், சினிமா தரும் வெளிச்சமும் புகழும் என்றென்றைக்குமானது என்று நினைத்த எத்தனையோ நட்சத்திரங்களின் எண்ணங்களைச் சுக்குநூறாக்கும் யதார்த்தத்தை, கேமிராவுக்கு பின்னிருந்த உண்மைகளை உரக்கச் சொல்கிறது இப்படைப்பு.

இந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் என்று போற்றப்படும் அசோக் குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், தேவிகாராணி, அவரது கணவர் ஹிமான்சு ராய் உட்படப் பல நட்சத்திரங்கள் வாழ்ந்த, வளர்ந்த விதத்தை நினைவூட்டும் சாயல் ‘ஜூப்ளி’யில் உண்டு. அதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது மறைந்துபோன அந்த நட்சத்திரங்களுக்கே வெளிச்சம்;

ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள், வாரிசுகள், அந்த தகவல்களைத் துல்லியமாகத் தெரிந்த இன்றைய தலைமுறையினர் அது குறித்த கேள்விகளை நிச்சயம் எழுப்புவார்கள்; போலவே, ’கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது’ என்பது போன்ற எதிர்மறை விமர்சனங்களையும் இது உண்டாக்கும்.

அவற்றையெல்லாம் தாண்டி, சினிமாவுலகம் என்பதே உண்மையும் பொய்யும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தது என்பதை உரக்கச் சொன்ன வகையில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது ‘ஜூப்ளி’.

நிச்சயமாக, இந்திய வெப்சீரிஸ் படைப்புகளில் இதுவொரு மைல்கல்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment