உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா?

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

தூக்கமும் சருமமும்!

உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

உரிய நேரத்தில் தூங்காமல் இருப்பதும், போதுமான நேரம் தூங்காமல் இருப்பதும் உடல், மன ஆரோக்கியத்தோடு சரும ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

செல்கள் உடலில் வளர்வதும் அழிவதும், புதிய செல்கள் உருவாவதுமான இந்த சீரான சுழற்சி, சருமத்தின் புத்துணர்ச்சியையும் பொலிவையும் பளபளப்பையும் அதிகரிக்கும்.

ஆனால் தூக்கமின்மை பிரச்சனையால், இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்தில் தங்கி முதிர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தும்.
இதன் காரணமாகவே ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லை என்றாலும் முகம் களையிழந்து காணப்படுகிறது.

அதனால், எக்காரணம் கொண்டும் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள், தொலைக்காதீர்கள்.

உடற்பயிற்சியும் ரத்த ஓட்டமும்!

உடற்பயிற்சி, சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. சருமத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை நெகிழ வைக்க யோகா, ஜிம், ஜாகிங் என உங்களால் இயன்ற பயிற்சிகளை செய்யுங்கள்.

இது வியர்வையையும், உடல் நச்சுகளையும் வெளியேற்ற உதவும். சருமத்துக்கு ரத்த ஓட்டம் தடையின்றி கிடைக்கச் செய்யும். சருமத்தின் ஜொலிஜொலிப்புக்கு வழிசெய்யும்.

தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு என ஒதுக்கினால் சருமம் மிளிரும்.
சூரிய ஒளி, சன்ஸ்க்ரீன், வைட்டமின் டி!

சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் சருமத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று பார்த்தோம். குறிப்பாக உச்சி நேர சூரிய ஒளி சருமத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.

அந்த நேரத்தில் மட்டும் சூரிய ஒளி சருமத்தில் படாமல் பார்த்துக் கொள்ளவும். அந்த நேரத்தில் வெளியில் செல்ல நேரிட்டால், சருமத்துக்கு சன்ஸ்க்ரீன் பூசிக்கொள்ளலாம்.

தவிர வீட்டிலிருக்கும்போதும் சருமத்துக்கு சன்ஸ்க்ரீன் பயன் படுத்துவது, மின் விளக்குகள் மற்றும் கேட்ஜெட்டுகளிலிருந்து வரும் நுண்ணலைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

அதிகாலை நேரத்தில் குறைந்தது 10 நிமிடங்களாவது சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுமாறு பார்த்துக்கொண்டால், சருமத்துக்கு இயற்கையான வைட்டமின் டி சத்து கிடைத்துவிடும்.

பட்டு போன்ற நம் சருமம் பாழாக முக்கிய காரணங்களில் ஒன்று, மன அழுத்தம்.
அடிக்கடி எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் மன உளைச்சலிலேயே உழன்று கொண்டிருப்பது சருமத்தின் புத்துணர்வை பாதிக்கும்.

சீக்கிரமே சருமச் சுருக்கங்களை ஏற்படுத்தி வயதான தோற்றத்தைக் கொடுத்துவிடும்.

மேலும் மன அழுத்தத்தால் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களாலும் சருமம் கெடலாம். ஆக, மனதை எப்போதும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் அதிகாலையில் பத்து நிமிடங்கள் கண்களை மூடி மூச்சுப் பயிற்சி செய்வது உங்களை ரிலாக்ஸ்டாக உணர வைக்கும். அதே நேரத்தில் ஆழ்ந்த சுவாசத்துக்கும் வழிவகுக்கும்.

தலைகுளிக்க வெந்நீரா… நோ!

எண்ணெய்ப் பசை கேசம் உள்ளவர்கள் தினமும் தலையை அலசலாம். அதுவே வறண்ட கேசம் கொண்டவர்கள் ஷாம்பூ பயன்படுத்தும் தினங்களை குறைத்துக் கொள்ளலாம்.

அதிகம் குளிர்ச்சியான தண்ணீர், அதிகம் சூடான நீர் இரண்டுமே கேசத்தை அலச தவிர்க்கப்பட வேண்டும். வெதுவெதுப்பான நீரிலேயே எப்போதும் தலைக்குக் குளிக்கவும்.

கேசம் பளபளக்க…

பொதுவாக, சருமத்துக்கு இணையான முக்கியத்துவத்தை கேசத்துக்கும் கொடுப்பது நம் வழக்கம்.

மரபு உணவு, தட்பவெப்ப நிலை, மாசு, கேசப் பராமரிப்புக்கு நீங்கள் ஒதுக்கும் நேரம் என இவை எல்லாவற்றையும் பொறுத்தே கேசத்தின் ஆரோக்கியம் அமையும்.

அழுக்கு, பொடுகு, பிசுபிசுப்பு என்று இல்லாமல் தலையையும் கேசத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பொடுகு பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

முடி உதிர்வதைத் தவிர்க்கவும் கேச வளர்ச்சியைத் தூண்டவும், உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

புரோட்டீன் நிறைந்த முட்டை, கோழி, துத்தநாகச் சத்து அடங்கிய வால்நட், ஒமேகா ஃபேட்டி ஆசிட் கொண்ட தயிர், மீன் என கேச ஆரோக்கியத்துக்கான உணவுப் பொருள்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

பொலிவு சாதனப் பொருள்களில் வேண்டும் கவனம்!

நீங்கள் முகத்துக்கும், சருமத்துக்கும், கேசத்துக்கும் உபயோகிக்கும் பொலிவு சாதனப் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தும்போது அவற்றால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
காஸ்மெட்டிக்ஸ் வாங்கும்போது அது பேக்கிங் செய்யப்பட்ட தேதி,

காலாவதியாகும் தேதி என எல்லாவற்றையும் செக் செய்து வாங்கவும்.
சிலரது சருமத்துக்கு சில காஸ்மெட்டிக்ஸ் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கு எது ஏற்றது என்பதைத் தெரிந்துகொண்டு அதையே பின்பற்றுங்கள்.
மற்றவர்களின் பரிந்துரைகளை நம்பி நம்பகத்தன்மை இல்லாத காஸ்மெட்டிக்ஸ் பொருள்களை வாங்காதீர்கள்.

மருத்துவ ஆலோசனை அவசியம்!

உங்களுக்கு ஏதேனும் சருமப் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவர் பரிந்துரை செய்தால் மட்டும் அடுத்தகட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்களாகவே ஏதாவது கை வைத்தியத்தில் ஈடுபடுவது ஆபத்து. அதேபோல் இணையத்தில் பார்த்துவிட்டு மருந்தகங்களில் நீங்களாகவே மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதும் தவறு.

வரும்முன் காப்பதே எப்போதும் சிறந்தது. ஏதாவது சருமப் பிரச்னை ஏற்பட்டு அதிலிருந்து குணமடைவதைவிட, எந்தப் பிரச்சனையும் வராமல் உங்கள் சருமத்தை பாதுகாப்பதே சிறந்தது.

முதலில் உங்களின் சருமம் எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அதைப் பராமரியுங்கள்.

தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சரும மருத்துவரிடம் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

நினைவிருக்கட்டும்… சரும ஆரோக்கியத்திலும் பராமரிப்பிலும் அக்கறை எடுத்துக்கொண்டால், வெளிப் பூச்சுகளின் தேவை இல்லாமல் போகும்!

– தொகுப்பு: மா.அருந்ததி

நன்றி: அவள் விகடன்

Comments (0)
Add Comment