உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா நியமனம்!

உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸுக்கு எதிராக பருவநிலை மாற்ற விவகாரத்தில் நாடுகளுக்கு நிதி வழங்குவதில் அவா் முறையாகச் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, வரும் ஜூன் மாதத்துடன் அப்பதவியில் இருந்து விலகுவதாக அவா் அறிவித்தார். எனவே, உலக வங்கிக்குப் புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி சூழலில் உலக வங்கியை திறம்பட வழிநடத்துவார் என நம்பிக்கை தெரிவித்து, அந்தப் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான அஜய் பங்காவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்தார்.

உலக வங்கித் தலைவா் பதவிக்கு அஜய் பங்காவைத் தவிர வேறு எவரும் விண்ணப்பிக்காததால் அவா் போட்டியின்றி தோ்வாவது உறுதியானது.

இந்நிலையில், அஜய் பங்காவைத் தலைவராக நியமிப்பதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை உலக வங்கி நேற்று வெளியிட்டது.  

காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் முனைப்புடன் உள்ள சூழலில் உலக வங்கி தலைவா் பொறுப்பை அஜய் பங்கா ஏற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments (0)
Add Comment