– உச்சநீதிமன்றம் தீவிர பரிசீலனை
வலியற்ற முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரியும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தூக்கிலிடப்படுவதற்கு பதிலாக வலியற்ற மாற்று யோசனைகள் குறித்து ஆராய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தூக்கு தண்டனைத் தவிர மற்ற வழிகளில் கண்ணியமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்த தரவுகளை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார்.
அதில், ‘‘தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேதனை குறைந்த அல்லது வலியில்லாத மாற்று தண்டனை வழங்குவது குறித்து ஆராய ஒன்றிய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைக்க பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் அதுசார்ந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்றுத் தெரிவித்தார்.
இதையடுத்து ஜூலை இரண்டாவது வாரத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பட்டது.