– குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா
“நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி அம்மன்.
அந்த அம்மனிடம் எதை வேண்டிக் கொண்டாலும், அது விரைவில் நிறைவேறும் என்பதற்கு அங்கு கூடும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.
ஈஸ்வரி அம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள், தங்கள் குடும்பத்தில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் முதல் மொட்டை போடுவது அவள் கோயிலில் தான்.
அந்தக் கிராமத்தில் யாருக்குத் திருமணம் நடந்தாலும் முதலில் அவளது கோயிலுக்குச் சென்று மாலை மாற்றிக் கொள்வது இன்றுவரை வழக்கமாக இருந்து வருகிறது.
எங்கள் கிராமத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கோயில்கள் தான். தஞ்சை மாவட்டத்தின் சிறப்பே கோயில்கள் தானே!
நான் என் குலதெய்வத்தை தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் அங்குள்ள மற்ற கோவில்களுக்கும் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம் உண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலைக்குப் போய் விட்டால், அவர்களை வீட்டிற்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்துதான் சரியாகும்வரை கவனித்துக் கொள்வது வழக்கம்.
ஒரு சமயம் என் பெரியப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. நாங்கள் அவரை பின்னுக்குக் கொண்டு வந்து படுக்க வைத்து விட்டோம்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் என் பெரியப்பாவிற்கு சர்க்கரையும் தண்ணீரும் கொடுத்தார்.
அதைச் சாப்பிட்ட என் பெரியப்பா உடல்நிலை சீராகி விரைவில் குணமடைந்தார். அதன் பின் அவர் இருபது வருடங்கள் உயிர் வாழ்ந்தார்.
யாராலும் காப்பாற்ற முடியாது என்று நினைத்த அவரை, அந்தப் பெரியவர் கொடுத்த தண்ணீரும் சர்க்கரையும் காப்பாற்றியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவரை அந்த ஈஸ்வரி அம்மனே அனுப்பி வைத்ததாகவே எங்களுக்குத் தோன்றியது.
எனவே வருடம் தவறாது என் குலதெய்வமான ஈஸ்வரி அம்மனை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
அதில் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் ஈடு இணை வேறு எதுவும் இல்லை.
சென்னையில் தான் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் தி.நகரில் உள்ள அகத்தியர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் குபேரன் கோயில்களுக்குச் சென்று வருவேன்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலும் நான் விரும்பும் கோயில்களுள் ஒன்று.
மனிதர்களை நம்புவதைவிட கடவுளை நம்புவது நல்லது என்பது என் கருத்து. என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்று உண்டு.
நான் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நேரம். அப்போது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்றேன்.
நம்முடைய கஷ்டங்களை பிரார்த்தனைச் சீட்டில் எழுதி, அங்குள்ள சூலத்தில் காட்டினால், அடுத்த ஏழாவது நாள் நம் குறைகள் தீர்ந்துவிடும் என்றார்கள்.
நானும் அப்படியே செய்துவிட்டு சென்னை திரும்பினேன். அப்போது என் கையில் வெறும் 40 பைசா மட்டுமே இருந்தது.
பாண்டி பஜாரில் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த என்னை அந்த வழியாக வந்த கதை ஆசிரியர் கலைமணி பார்த்துவிட்டு காரை நிறுத்தி, “டைரக்டரே இங்கே வாங்க!” என்று அழைத்தார்.
நான் அந்த வார்த்தையைக் கேட்டதும் சந்தோஷத்தில் மிதந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்புதான், என் முதல் படமான ‘பிள்ளை நிலா’. அதன்பின் நான் பிரபலமாகத் தொடங்கிவிட்டேன். கஷ்டங்களும் தீர்ந்தன.
நான் வேண்டி வந்த வரத்தை இரண்டே நாட்களில் நிறைவேற்றி வைத்த அந்த வெக்காளி அம்மனை, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நேரில் சென்று தரிசித்து வருகிறேன்.
நீங்களும் நேரம் கிடைத்தால் மறவாமல் அந்த அம்மனை தரிசித்து வாருங்கள், உங்கள் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறும்.
– அகில் அரவிந்தனின் ‘பிரபலங்களின் குலசாமிகள்’ நூலிலிருந்து…