முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதி 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதோடு வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுடன் நடைப்பெற்ற ஆலோசனையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.