கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்ட கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார் புரம் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் நீரை ரசித்து செல்கின்றனர்.
இதேபோல், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, பரவை, பொய்கைநல்லூர், செருதூர், பூவைத்தேடி, வீரன்குடிகாடு, வடவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் கடும் வெயிலில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி, பூலாம்பட்டி, சித்தூர் கொங்கணாபுரம் நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது.
இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. எழும்பூர், அண்ணா சாலை, அடையாறு, திருவான்மியூர், வடபழனி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெய்யிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.