16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் அவுட்டானார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிக்கந்தர் ரசா 36 ரன்களும், லிவிங்ஸ்டோன் 23 ரன்களும், சாம் கர்ரன் 21 ரன்களும் எடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதர்வா டெய்ட் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில், பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.
இதன்மூலம், இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணி அதிகபட்ச ரன்களைக் குவித்துள்ளது. தவிர, ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த இரண்டாவது அணியாகவும் லக்னோ அணி, சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 235 ரன்களை எடுத்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த அணியாக சென்னை அணி முதலிடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் லக்னோ அணி, 257 ரன்களைக் குவித்து, இந்த சீசனில் அதிகபட்ச ரன்களை எடுத்த அணியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.