1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர்.
பெரியாரைவிட ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர். 37ஆண்டுக் காலம் ஆசிரியப் பணி, கவிதைத் தொழில், நாடகப்பணி, திரைப்பட ஈடுபாடு ஆகியவற்றோடு காங்கிரஸ் தேசிய இயக்க, சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
சிறிது காலம் புதுவைச் சட்டமன்ற உறுப்பினராக வும் இருந்தவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிரெஞ்சு இந்தியாவிலும் மட்டுமின்றி உலகளவிலும் ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளினூடாக வாழ்ந்தவர்; அவற்றின் நேரடிச் சாட்சியாகவும் விளங்கியவர்.
1928-ம் ஆண்டுதான் பாரதிதாசனுக்கும் பெரியாருக்குமான தொடர்பு அரும்புகிறது. அன்று தொட்டு 1964 வரை, அதாவது 36 ஆண்டுக்காலம் பகுத்தறிவியக்கச் பறவையாய்ப் பாவேந்தர் சிறகடித்துப் பறந்தார்.
அவருக்கும் பெரியாருக்கும், அவருக்கும் தன்மான இயக்கத்திற்கும் அறுபட முடியாத ஓர் உறவுப் பாலத்தைக் காலம் தன்போக்கில் கட்டி அமைத்தது. அஃது வரலாற்றில் ஓர் இன்றியமையாதத் தேவையாகவும் அமைந்தது…
“பொது மருத்துவமனையில் பாரதிதாசன் படுத்திருந்தபோது, அனுசூயா என்பவர் “அப்பா’’ என்று அழைத்தபடி அன்பு மிகுதியால் வடபழனி கோவில் திருநீற்றை அவர் நெற்றியில் பூச முனைந்தார்.
‘என்ன மந்திரமா?’ எனச் சினந்து பேசியபடித் திருநீற்றைத் தட்டி விட்ட பாரதிதாசன்…
“மூடத் தனத்தை முடுக்கும்
மதத்தை நிர்
மூலப் படுத்தக்கை ஓங்குவீர் – பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் –
செல்வ நாடு நமக்கென்று வாங்குவீர்!’’ – என்றாராம்.
அந்தளவுக்குப் பெரியாரைத் தம் வாழ்வின் தனிப்பெருந் தலைவராய் ஏற்றுக் கொண்டவர் பாவேந்தர் பாரதிதாசன்.
– நன்றி: முகநூல் பதிவு