– கோபுலு பற்றி மணியம் செல்வன்
கோபுலு என்ற மகத்தான மனிதரை ஓவியர் என்ற வகையில்தான் பலருக்கும் தெரியும். ஆனால், சமஸ்கிருதம் முதல் வர்த்தகம் வரை அவர் கரை சேர்ந்த ஜாம்பவான் என்பது பலர் அறியாத அவரது இன்னொரு புறம்.
என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில்தான் கோபுலுவின் வீடு என்பதால், சிறிய வயதிலிருந்தே அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தது.
என் அப்பாவின் (பிரபல ஓவியர் மணியம்) சமகாலத்தவர் என்பதால், ஓவியம் என்றால் என்னவென்று புரியாத வயதிலிருந்தே அவரின் பெயரும் ஓவியங்களும் எனக்கு அறிமுகமாகி விட்டது.
எஸ்.ராஜம், கே.மாதவன், சில்பி, கோபுலு இவர்கள் அனைவரும் அப்பாவின் காலத்தில் இருந்தவர்கள் என்றாலும் என்னைப் பாதித்தவர்கள்.
புத்தகத்தைப் புரட்டிப் படம் பார்க்க ஆரம்பித்த ஏழு வயதில் ஆனந்த விகடனை எடுத்துப் புரட்டுவேன். நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் கோபுலுவின் படங்கள் மூலமே விளக்கப்பட்டிருக்கும். கோபுலுவின் ஓவியங்களைப் பார்த்தவுடன் அந்தக் கோடுகளில் ஒளிந்திருக்கும் குறும்பு, சிரிப்பை வரவழைக்கும். இப்படித்தான் அந்த ஓவியங்கள் மீது ஈர்ப்பு வர ஆரம்பித்தது.
கடையில் போய் விகடன் மலர் வாங்கி வரச் சொல்வார் அப்பா. கருப்பு, வெள்ளைப் படங்கள் வந்த காலத்தில் தீபாவளி மலர் மட்டும் கலரில் வரும். கல்கி தவிர மற்ற பத்திரிகைகளில் எல்லாம் கோபுலுவின் ஓவியங்கள் வந்திருக்கும்.
கோபுலுவின் நகைச்சுவை ஓவியங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு, தீபாவளி மலரில் ஆதிசங்கரர் போன்ற ஆன்மீகக் குருவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதையின் படம், புராணக் கதைகளில், இலக்கியத்தில் என்று பல்வேறு விதங்களில் கோபுலு வரையும் ஓவியங்களைப் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பு சொல்லி மாளாது…
எனக்கு மட்டும் அல்லாது மற்ற ஓவியங்களுக்கும் இப்போது பிதாமகன் அவர்தான்.
என் அப்பா சரித்திர கதாபாத்திரங்கள் மற்றும் சமூகம், ஆன்மிகம் தொடர்பான படங்கள் வரைவதில் திறமையானவர். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அவரின் ஓவியத் திறமைக்குப் பிரசித்தி பெற்றது.
ஓவியத்தின் ஏதாவது ஒரு முறையை முழுமையாகக் கற்று அதில் சிறப்பு பெற வேண்டும் என்பது அவரின் அறிவுரை. ஆனால் கோபுலுவிடம் அதுபோல வரையறை கிடையாது. அனைத்துப் பரிமாணங்களிலும் வரக்கூடியவர் கோபுலு. எனக்கு அது பெரிய தூண்டுகோலாக இருந்தது. எப்படிப்பட்ட ஓவியமானாலும் வரைய வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்தது.
1968 ஆம் ஆண்டு தனது நாற்பத்தி ஐந்தாவது வயதிலேயே என் அப்பா மறைந்துவிட்டார். ஓவியத்தை முழுநேரமாக எடுத்துக் கொள்ளலாமா என்று நான் யோசித்தபோது, அப்போதும் எனக்கு வழிகாட்டியது கோபுலு தான். அவர் அப்போது பல முன்னணி பத்திரிகைகளில் வரைந்து, பிரபலமாக இருந்தார்.
இந்நிலையில் நான் விளம்பர ஏஜென்சியில் சேர்ந்து, பணியை ஆரம்பித்தேன். கோபுலு விளம்பர ஏஜென்சியில் ஆர்ட் டைரக்டராக பணியில் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப் பின் தானே ஒரு விளம்பர ஏஜென்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில் முன்பு அவர் பணி செய்த விளம்பர ஏஜென்சியிலேயே எனக்கு வேலை கிடைத்தது. அந்த நிமிடம் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதனிடையே பகுதி நேரமாக பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இதனால், அடிக்கடி விளம்பர ஏஜென்சி அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கவேண்டிய நிலை.
ஒரு கட்டத்தில் முழுநேர பத்திரிகை ஓவியனாகவே மாறிவிட்டேன். ஓவியக் கல்லூரியில் நான் படித்தது கமர்ஷியல் ஆர்ட். ஆனால் கோபுலுவைப் போல எல்லாவகை ஓவியத்திலும் மாஸ்டராக வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது.
‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படமாக எடுப்பதற்கு முன், கொத்தமங்கலம் சுப்பு அதை விகடனில் தொடர்கதையாக எழுதினார். அதற்கான ஓவியம் கோபுலுதான். அந்த ஓவியங்களைப் பார்த்தால் மோகனாம்பாள், சண்முக சுந்தரம், வைத்தீ, ரமாமணி என்று எல்லா கதாபாத்திரங்களும் உயிர்ப்புடன் இருக்கும்.
சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவைத் தொடருக்கு கோபுலு வரைந்த படங்களை இன்றும் அதே பிரமிப்பு சிறிதும் மாறாமலேயே தான் பார்க்கிறேன்.
பழமையான ஓவிய முறைகள் மட்டுமின்றி, நவீன ஓவியங்களையும் ‘லைன் டிராயிங்’ எனப்படும் கோடுகளைக் கொண்டு வரையும் திறன் கொண்டவர் கோபுலு.
76 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கோபுலு வேலை செய்த பத்திரிகை. அடிக்கடி கோபுலுவைச் சந்தித்துப் பேசும் வழக்கம் உண்டு.
நகைச்சுவை உணர்வில் அவரை மிஞ்ச யாரும் கிடையாது. எப்போதும் என்னிடம் சொல்வார், “சொல்ல வருவதை ஓவியத்தில் சரியா சொல்லணும்… ஓவியத்திற்கு உயிர் கொடுக்கிறேன்னு அதோட உயிரை எடுத்திடக் கூடாது”.
தன் வீட்டில் உட்கார்ந்து பேசும்போது, “ஜோக்கா கட்டின வீடு இது. இந்த வீட்டுல இருக்கிற கல்லு ஒவ்வொன்னும் ஒரு நகைச்சுவை ஓவியத்துக்குப் படம் போட்ட காசுல கட்டினது” என்பார் நகைச்சுவையாக.
தன்னுடைய 78-வது வயதில் விகடனில் வாலி எழுதிய ‘ராமானுஜர் காவியம்’ என்ற கவிதை உரைநடை காவியத்திற்குப் படம் போட்டார் கோபுலு. எதிர்பாராத விதமாக ஸ்ட்ரோக் வந்துவிட்டதால், தொடர முடியவில்லை.
மருத்துவமனைக்குப் பார்க்கப் போனேன். நான் பயந்ததுபோல இல்லாமல் உற்சாகமாக இருந்தார். உடம்பிற்கு எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தபோதும் மனதளவில் வழக்கமான நகைச்சுவை உணர்வோடு இருந்தார்.
அந்தச் சமயத்திலும், “நான் டிராயிங்ல நிறைய ஸ்ட்ரோக் போடுறேன் இல்ல… அதான் எனக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு..” என்றார்.
“ஆமாம், ஒரு பக்கம்தானே ஸ்ட்ரோக்… இன்னொரு கை இருக்கிறதே..” என்று சொல்லி தினமும் ஏதாவது ஒரு ஓவியம் வரைவார்.
டாக்டர் வந்தவுடன் காட்டுவார். அவரால் அந்தத் தொடரைத் தொடர முடியாமல் கோபுலுவிற்குப் பதில் மாருதி வரைந்தார். மாருதி வரைந்ததைப் பார்த்து பாராட்டுவார். தொடரின் முடிவில் அவருடைய ஓவியமும் இடம்பெற்றது.
என்னுடைய ஓவியக் கண்காட்சி ‘வாழையடி வாழை’ திறப்பு விழாவில் பங்கு பெற்று வாழ்த்தியதை ஒரு பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.
அவர் அடிக்கடி சொல்லும் விஷயம், “நல்லா வேலை பண்ணுங்க. எல்லாமே லைட்டா எடுத்துக்கணும். நாமெல்லாம் கண்களையும் காதுகளையும் திறந்து வைச்சுக்கணும். நம் ஓவியம் தான் பேசணும். டிராயிங் பேலன்ஸ் மட்டுமல்லாது, பேங்க் பேலன்ஸ் பார்க்கணும்”.
நான்கு ஆண்டுகளுக்கு முன் சில ஓவியர்களுக்கு அவர் பயன்படுத்திய ரெஃபரன்ஸ் ஓவியப் புத்தகங்களை அவரவர் தேவைக்கேற்ப தன் அன்பளிப்பாய் கொடுத்ததில் எனக்கும் சில புத்தகங்கள் கொடுத்தார். இதனால், அவரின் உயர்வான எண்ணங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
ஒருமுறை பத்திரிகையாளர் ஜ.ர.சுந்தரேசன், கோபுலுக்கு நடத்திய பாராட்டு விழாவில் நான் அவருக்கு தட்சணாமூர்த்தியின் படம் வரைந்து கொடுத்தேன்.
என் அப்பா இருந்திருந்தால் சொந்த வாழ்க்கையிலும் ஓவியத்திலும் எனக்கு என்னென்ன அறிவுரை சொல்லி இருப்பாரோ, வழிகாட்டி இருப்பாரோ அவையெல்லாம் குறையில்லாமல் கோபுலுவிடமிருந்து இன்றுவரை கிடைத்துக் கொண்டிருக்கிறது.
எனவேதான் அவரையும் என் குருவாக நினைத்து தக்ஷிணாமூர்த்தியின் படம் வரைந்து கொடுத்தேன். அவருக்கு இதைவிட சிறந்த ஓவியம் என்னால் தர முடியாது. அவரை இதுவரை நான் ஓவியமாக வரைந்ததில்லை. முதன்முறையாக புதிய தலைமுறைக்காக கோபுலுவை வரைந்திருக்கிறேன்.
– அக்டோபர் 2011 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளிவந்த கட்டுரை…