அரிய, பெரிய வகை பார்மீன்களில் ஒன்று பாக்குவெட்டி (Humphead Wrasse). ஆறடி நீளமுள்ள 180 கிலோ வரை எடையுள்ள மீன் இது.
Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது பாக்குவெட்டிதான். தடித்த உதடுகளையும், நெற்றியில் முடிச்சு போன்ற சதையும் உள்ள இந்த மீன், முப்பது ஆண்டுகாலம் உயிர் வாழக்கூடியது.
பாக்குவெட்டிக்கு மாவோரி (Maori Wrasse), நெப்போலியன் மீன் என்றெல்லாம் ஆங்கிலத்தில் பெயர் உண்டு. தமிழில் இந்த மீனுக்கு ஏன் பாக்குவெட்டி என்ற பெயர் என்பதை இன்னும் சற்றுநேரத்தில் தெரிந்து கொள்வீர்கள்.
மனிதர்களுக்கு ஆபத்தற்ற மீன் இது. பார்க்கடலில் முக்குளிக்கும் வீரர்களுக்கு மிகவும் பரிச்சயமான மீன்களில் ஒன்று இந்த பாக்குவெட்டி.
கடலுக்குள் முக்குளிப்பவர்களை கண்டால் இது மிக அருகில் வந்து அவர்களை உன்னிப்பாகக் கவனிக்கும்.
மனிதர்கள் தடவிக் கொடுப்பதையும் இது விரும்பும். பழகிய நாய் போல மனிதர்கள் கையால் தரும் உணவையும் கூட அது விரும்பி உண்ணும்.
வளர்ந்த ஆண் பாக்குவெட்டி மீன், எப்போதும் தனியாகவே திரியும். பார்களைச் சுற்றிசுற்றி வந்து விட்டு, இரவில் தனது குகையை இது அடையும்.
மானின் கிளைக்கொம்பு போன்ற பவழப்பாறை அடர்த்திகளில் அடிக்கடி இந்தமீன் காணப்படும்.
பாக்குவெட்டியில் இளம் மீன்களை அவற்றின் வெளிர்ப்பச்சை நிறத்தாலும், விழிகளுக்குப் பின்னால் ஓடும் இரு கரிய கோடுகளைக் கொண்டும் அறியலாம்.
முதிர்ந்த காலத்தில் பாக்குவெட்டி மீன்களில், பெண்மீன், ஆணாக மாறக் கூடியது(!)
தடித்த உதடுகளைக் கொண்டிருக்கும் இந்த அழகிய பெரிய மீன், பலமான பற்களால், கடினமான ஓடுகள் கொண்ட முட்தோலிகளை முறுக்கைத் தின்பது போல நொறுக்கித் தின்னக்கூடியது.
அதனால்தான் இதற்குப் பாக்குவெட்டி என்று பெயர். ஓரா (ஓட்டா) போன்ற நஞ்சுமீன்கள், கடமாடு, கூர்ப்பல் உள்ள அஞ்சாலை மீன், போன்றவையும் இதன் உணவு.
பார்களை வெகு விரைவாக அழிக்கக் கூடிய முள்முடி (Crown of Thorn) நட்சத்திர உயிர், பாக்குவெட்டி மீனின் முதன்மை உணவு. இதன்மூலம் பவழப்பாறைகள் அழிந்துவிடாமல் பாக்குவெட்டி காக்கிறது.
மன்னர்களுக்கு வழங்கப்படும் உயரிய மீன் இது. பழங்காலத்தில் இந்தமீனைப் பிடித்த பரதவர்கள் தங்களால் மதிக்கப்படும் மிக உயர்ந்தவர்களுக்கு இதை பரிசாக வழங்கியுள்ளனர்.
Cheilinus undulatus என்பது பாக்குவெட்டியின் அறிவியல் பெயர்.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு