– பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இடம் பெறவில்லை
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும். மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
இதேபோன்று தேசியக் கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதுடன், 4 மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும்.
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தால், தேர்தலின் போது அந்த கட்சி மற்றும் அதன் வேட்பாளருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.
தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அந்தக் கட்சி இடம் பெற்றுள்ளது.
இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன.
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.