அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தம்பி இரா.செழியன்!

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற சிற்றூரில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிறந்தவர் இரா.செழியன்.

இவர், தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த இரா.நெடுஞ்செழியனின் உடன்பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்.சி. (ஹானர்ஸ்) படித்த இரா.செழியன், மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் இணைந்தார்.

அண்ணாவால் திராவிட முன்னேற்றக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதில் இணைந்த செழியன், அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தம்பியாக விளங்கினார். 1962-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என 22 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளால், சிறந்த நாடாளுமன்றவாதி என்று புகழப்பட்டார்.

1977-ல், தி.மு.க-வில் இருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1977-ம் ஆண்டு தேர்தலில் இரா.செழியன் தோல்வியடைந்தபோது, நாடாளுமன்றத்தில் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள், ஜனதா கட்சிக்கு செல்வாக்கு உள்ள வடமாநிலங்களில் இருந்து இரா.செழியனை மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்கு விரும்பினர்.

ஆனால், அதற்கு இரா.செழியன் மறுப்பு தெரிவித்துவிட்டார். பிறகு, 1978-ம் ஆண்டு மொரார்ஜி தேசாயின் வேண்டுகோளுக்கு இணங்க, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அளித்த ஆதரவின் மூலமாக மாநிலங்களவை உறுப்பினரானார் செழியன்.

1984-ல் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட செழியன், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகை வைஜெயந்திமாலாவிடம் தோற்றார்.

ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செழியனின் செயல்பாடுகள் பெரும் கவனிப்புக்கு உரியதாக இருந்தன.

இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை காலத்துக்குப் பிறகு, ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அவசரநிலைக் காலத்தில் நடைபெற்ற தவறுகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக ஷா கமிஷன் நியமிக்கப்பட்டது.

ஆனால், ஜனதா கட்சி தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு போன்ற காரணங்களால், கட்சி பிளவுபட்டு, ஆட்சியும் பறிபோனது.

மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானார். அப்போது, ஷா கமிஷன் அறிக்கை மறைக்கப்பட்டது. அதைக்கேள்விப்பட்டு, ‘Shah Commission Report -Lost and Regained’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

2001-ம் ஆண்டு, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் இரா.செழியன்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல. பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன்.

மக்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, ‘ஓர் அரசியல் விலங்கு’ என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார்.

எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பிப்பதற்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது, 2005-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் செழியனுக்கு வழங்கப்பட்டது.

இரா.செழியன் மீதான அன்பு காரணமாக, அவரை தன்னுடைய பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசியராக நியமித்தார், வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் வேந்தரான விஸ்வநாதன். இவர்கள் இருவருமே அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

இருவரும் நாடாளுமன்றத்தில் ஒரே காலத்தில் எம்.பி-களாக செயல்பட்டவர்கள். தன் மரணம் வரை வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்திலேயே செழியன் தங்கியிருந்தார்.

தன் வாழ்நாளில் சேகரித்துவைத்திருந்த 6,500 நூல்களை வி.ஐ.டி பல்கலைக் கழகத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும் எழுத்துப்பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து, அதை ஆங்கிலத்தில் நூலாக வெளியிட்டார்.

இலங்கை தமிழர் பிரச்னை, ஈழப்போர், ஊழல் என பல முக்கியப் பிரச்னைகளில் தன் கருத்துக்களைத் தெரிவித்துவந்தார்.

ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலங்களில், 22 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, சிறந்த நாடாளுமன்றவாதி, நேர்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்த மூத்த அரசியல் தலைவர் இரா.செழியன், ஜூன் 6-ம் தேதி 95-வது வயதில் இயற்கை எய்தினார்.

  • நன்றி : ஆனந்த விகடன்
Comments (0)
Add Comment