தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் காவேரி’க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது என்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருதாகவும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்திற்குத் தாம் கொண்டுவர விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐ.என்.எஸ் சுமேதா கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும்,
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சூடானில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்பதற்கான தகவல்களைப் பெற தனி கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைத்துள்ளது.
மீட்கப்படும் தமிழா்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரக அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறையை 011 – 2419 3100, 92895 16711 என்ற எண்களிலும், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 96000 23645 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.