ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும்.
அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை – தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ பதிவும், அதில் வெளிப்பட்டிருக்கும் விஷயங்களும்.
அதே சமயத்தில் தான் செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டி தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தி.மு.க முக்கியப் புள்ளிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அதையடுத்துச் சில நாட்களிலேயே பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ பதிவு வெளிவந்து தொடர்ச்சியான பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு என்று புதிய எண்ணிக்கை அதில் பதிவாகியிருப்பது தான் சர்ச்சைக்குக் காரணம்.
அந்த ஆடியாவைப் பொதுவெளியில் கசிய விட்டவரான சவுக்கு சங்கர் தான் வெளியிட்டிருப்பது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் அசலான குரல் தான் என்கிறார்.
இதையடுத்து அந்த ஆடியோ பதிவு தன்னைப் பிளாக்மெயில் பண்ணும் நோக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர்.
தான் எந்தச் செய்தியையும் யாரிடமும் கூறவில்லை என்றும் முதல்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து தன்னைப் பிரிக்கச் சதி நடப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் டெல்லி துவங்கி தமிழ்நாடு ஆளுநர் ரவி வரைக்கும் இந்த ஆடியோ விவகாரம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பி.டி.ராஜனின் வழிவந்தவரும், நிதி மேலாண்மை குறித்த அனுபவப் பின்னணியும் கொண்டவரான பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ பேச்சு ஆளும்கட்சியான தி.மு.க.வுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வசமான தீனியாக மாறியிருக்கிறது.
இன்றைக்குள்ள அதி நவீனத் தொழில்நுட்பத்தில் யாரும் எப்படியும் கண்காணிக்கப்படலாம்; யாருடைய பேச்சும் எப்படியும் பதிவு செய்யப்படலாம்.
‘பிரைவஸி’ என்பதற்கான அர்த்தத்தை வலுவிக்க வைத்துக் கொண்டிருக்கிறது நவீனத் தொழில்நுட்பத்தின் வேகம்.
ஆடியோ பதிவில் இருப்பது உண்மையில் நிதியமைச்சரின் குரல் தானா என்பதைச் சோதனையில் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
அப்படி ஆடியோவில் வெளிப்பட்டிருப்பது அவருடைய குரல் தான் என்பது நிரூபணம் ஆனால் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிடும்.
ஆளும் கட்சிக்கு ஒரு கறையைப் போலவும் ஆகிவிடும். அப்படி அவருடைய குரல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும் கூட, அதுவரை இது தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டு தானிருக்கும்.
மக்கள் திலகம் எம்.ஜிஆர் நடித்த ‘அடிமைப் பெண்’ படத்தில் “எந்தச் சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்’’ என்றொரு யதார்த்தமான வரி வரும்.
தற்போதைய அரசியல் மற்றும் அதிகார மையங்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான எச்சரிக்கையைப் போலிருக்கிறது அந்த வரி.