கணித மேதை ராமானுஜன் நினைவு தினம் இன்று – (ஏப்ரல் 26)
கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள். அப்படி ஒருவர் தான் சீனிவாச ராமானுஜன். அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர். ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி. பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது.
கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர். பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்னார். பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்டபொழுது அவருக்கு வயது பத்துக்குள்.
ராமானுஜனுக்கு கணிதத்தின் மீது ஈடில்லா ஆர்வம் வருவதற்கு ஓர் எளிய சம்பவம் காரணம்.
அவரின் நண்பன் சாரங்கபாணி 45-க்கு 43 வாங்கியிருந்தார். இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார். அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல். இன்னொன்று காரின் சினாப்சிஸ்.
அதில், கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள், தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும். எப்படி வந்தது என விளக்கம் இருக்காது. அதைப் படித்துதான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார்.
அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார். பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளைப் போட்டு பார்த்துவிட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினாராம்.
கணிதத்தில் கிட்டத்தட்ட நாலாயிரம் அற்புத சூத்திரங்களை வழங்கி, என்றும் அழியாப் புகழை ராமானுஜன் அடைந்தார். குறிப்பாக இவர் வழங்கிய π (பை) என்ற எண்ணிற்கான சூத்திரங்கள் பிரமிக்க வைக்கும் தன்மை வாய்ந்தவை.
மற்ற அறிஞர்கள் ஒரு சில தசம புள்ளிகள் வரையிலேயே π ன் மதிப்பை துல்லியமாக வழங்க முடிந்த நேரத்தில் ராமானுஜன் வழங்கிய சூத்திரங்கள் π ன் மதிப்பை கோடிக்கணக்கு தசம புள்ளிகளுக்கு மேல் துல்லியமாக வழங்கியது அனைவரையும் அதிர வைத்து விட்டது.
அன்று ராமானுஜன் ஏற்படுத்திய எண் கணித சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு இன்று எண் கணிதத்தில் பல புதிய கண்டுப்பிடிப்புகள் நிகழ்வதை நாம் காண்கிறோம்.
ராமானுஜன் தன் வாழ்நாளில் மொத்தம் 37 கணித ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இவரது கணித திறனை பாராட்டி கணிதத் துறையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கி கௌரவித்தது.
இதுவரை கணிதத்தில் இந்தியாவில் உள்ளவர்களில் மொத்தம் நான்கு நபர்களே F.R.S. பட்டம் வென்றிருக்கிறார்கள். ராமானுஜன் பெயரில் உலகளவில் இரு முக்கிய சர்வதேச பரிசுகள் 2005 முதல் வழங்கப்படுகின்றன.