“ஆனி போய், ஆடி போய் ஆவணி வந்தா போதும், அவன் டாப்பா வந்துடுவான்” இந்த ஒரு டையலாக் போதும் இவர் யார் என்று கண்டுபிடிக்க.
கணவருக்கு தெரியாமல் கடுகு டப்பாவில் இருந்து காசு எடுத்து கொடுப்பது, மகனுக்கு ஆதரவாக பேசுவது, தன்னுடைய மகன் காதலியை அறிமுகப்படுத்தும் போது சிரித்துக்கொண்டே ஒப்புக்கொள்வது, மகன் சோர்ந்து போகும் போது ஊக்கமளிப்பது என காமெடி, சென்டிமென்ட், வீரம் என்று எதுவாக இருந்தாலும் தனது திறமையை ஓர் தாயின் உணர்விலிருந்து காண்பிப்பவர்.
ஷீலா என்னும் பெயர் கொண்ட சரண்யா கேரளாவில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
திரையுலக வாழ்க்கை :
மணிரத்னத்தின் “நாயகன்” எனும் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானார் சரண்யா பொன்வண்ணன்.
1980 – 1990 வரைக்கும் முன்னனி கதாபாத்திரத்தில் தன்னுடைய திறமையைக் காட்டிய இவர், 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-ல் துணை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
குறிப்பாக, “அம்மா” கதாபாத்திரம் தான் இவரின் ஸ்பெஷல்.
1988ஆம் ஆண்டில் வெளியான ‘நீராஜனம்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
1989 ஆம் ஆண்டில் அர்த்தம் திரைப்படத்தில் மம்மூட்டிக்கு எதிராக நடித்தார்.
1996-ல் ‘அப்பாஜீ’ என்ற படத்தின் மூலம் கன்னட நடிகையாக அறிமுகமானார்.
1995 இல் திருமணம் செய்து கொண்ட சரண்யா, அதன்பிறகு திரைபடங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
பின் ஒரு இடைவெளிக்கு பிறகு, நகைச்சுவை தொடரான ‘வீட்டுக்கு வீடு லூட்டியில்’ முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அதன்பிறகு, நல்ல வாய்ப்புகளிலும், துணை கதாபாத்திரங்களிலும் நடிக்க தீர்மானித்தார்.
பிறகு ராம், தவமாய் தவமிருந்து, எம் – மகன் போன்ற படங்களில் அம்மாவின் கதாபாத்திரத்தில் அசத்தினார்.
2005-ம் ஆண்டில் வெளியான ‘தவமாய் தவமிருந்து’ இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது; இதனால் தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக மாறினார், சரண்யா பொன்வண்ணன்.
2010-ம் ஆண்டில் வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தில் வீராய், எனும் கதாபாத்திரத்தில் ஒரு மகனின் மீது அதீத பாசம் கொண்ட வீரம் உள்ள விதவை தாயாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்தப் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது.
திரையுலகில் 1987- நாயகனில் தொடங்கிய பயணம், வரிசையாக அன்று பெய்த மழையில் (1989), அஞ்சலி (1990), அக்கினிப் பறவை (1992) , தவமாய் தவமிருந்து மற்றும் எம் – மகன்(2005), குருவி, பாண்டி,
தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி (2008), களவாணி (2009), முத்துக்கு முத்தாக, தென்மேற்கு பருவ காற்று (2010), ஒரு கல் ஒரு கண்ணாடி (2011), நீர்பறவை (2012), குட்டிப்புலி, இது கதிர்வேலன் காதல், நான் சிகப்பு மனிதன் (2013),
வேலையில்லா பட்டதாரி (2014), 24, ரெமோ, கொடி (2016) என தென்னிந்தியத் திரைப்படத்துறையில் தனக்கான ஓர் இடத்தை தக்க வைத்துள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
பின்னணி பாடகி:
என்னமோ நடக்குது (2014) படத்தில் “மீச கொக்கு” பாடலையும், மகளிர் மட்டும் படத்தில் “டைம் பாசுக்குகோசுரம்” எனும் பாடலையும் பாடியுள்ளார்.
விருதுகள் :
தேசிய திரைப்பட விருதுகள் : 2011, சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்க்காக பெற்றார்.
தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள் : சிறந்த துணை நடிகைக்கான மாநில விருதை 2006-ல் எம் – மகனுக்காகவும், 2010ல் களவாணிக்காகவும் பெற்றார்.
பிலிம்ஃபேர் விருதுகள் : 2005 – ல், வெளியான தவமாய் தவமிருந்து, படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.
தொடர்ந்து, 2006-ல் எம்- மகன், 2011- ல் தென்மேற்கு பருவகாற்று, 2012 – ல் நீர்பறவை ஆகியவற்றிற்க்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.
மேலும், புலி (தெலுங்கு 2010), வேலையில்லா பட்டதாரி (2014), கொடி (2016 ) முதலிய படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் : 2013- ஆம் ஆண்டு நீர்பறவை, 2015 – வேலையில்லா பட்டதாரி படங்களுக்காக சிறந்த நடிகை விருதை தட்டிச் சென்றார்.
விஜய் விருதுகள் : 2011, தென்மேற்குப் பருவக்காற்றுக்காக சிறந்த துணை நடிகைக்கான வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் : 2011 – தென்மேற்கு பருவக்காற்று, 2013- ஒரு கல் ஒரு கண்ணாடிக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார் சரண்யா பொன்வண்ணன்.
எடிசன் விருதுகள் : 2011- தென்மேற்கு பருவக் காற்றுக்காக சிறந்த துணை நடிகைகான விருது வழங்கப்பட்டது.
JFE விருதுகள் : 2014 – ஆம் ஆண்டின் பெண் சாதனையாளருக்கான விருது அளிக்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை:
முன்னனி கதாநாயகர்களை கொண்டு 75 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய பிரபல மலையாள திரைப்பட இயக்குனர், A.B. ராஜாவின் மகளே சரண்யா.
சரண்யா, 1995 – ல் நடிகர் மற்றும் இயக்குனரான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நன்றி : ஆனந்த விகடன்