டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 3
பேரிடர் காலத்தில் நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பொறுப்பேற்று அந்தக் கிராம மக்களை வெளியேற விடாமல் பாதுகாத்து, உணவு வழங்கி எந்த இறப்பும் இன்றி செயல்பட்டது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.
எல்லோருக்கும் முகக்கவசம் கொடுப்பது, பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது, இல்லம் தேடி உணவுப் பொருள்கள் தந்தது, துப்புரவு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைத்தும் தாய்மை அரசு செயல்படுவதைப் போல் செயல்பட்டுள்ளது பஞ்சாயத்து.
மேலாண்மை செய்யாத குப்பைக் கிடங்குகளிலிருந்து குப்பைகளை அகற்றி உரம் தயாரிப்புச் செய்து வருகின்றனர்.
அந்த இடத்தில் அரசுத் துறையின் உதவியுடன் நாற்றங்கால் உருவாக்கி மரக்கன்றுகள் விதைபோட்டு உருவாக்கி அரசாங்கத்துறைக்கே தந்திடும் செயல்பாடு அடுத்த முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. சாலைகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர் இந்தப் பஞ்சாயத்தில்.
இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் சாதாரணமாக நடைபெற்றதில்லை. அனைத்தும் பல போராட்டங்களை பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்து சாதித்துள்ளனர்.
இதுவரை கிராமப் பொதுச்சொத்தை அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதாக எதையும் விட்டுத்தர மாட்டார்கள்.
போராட்டத்தின் மூலம்தான் அனைத்துச் செயல்பாடுகளும் நடந்தேறின. கிராம மேம்பாட்டிற்கான ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றினை உருவாக்க ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியது இந்தப் பஞ்சாயத்து.
அந்த திட்டம் என்பது தேவைகளும் தேவைகளைத் தாண்டிய கனவுகளையும் உள்ளடக்கிய ஒன்று.
ஆக்கிரமிப்பை அகற்றிய இடத்தை பயன்படுத்த திட்டமிட்டு ஒரு குருங்காடு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 1500 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகின்றது.
இவற்றையும் தாண்டி அரசுத் திட்டங்களை செயல்படுத்த நிதி பற்றாக்குறை ஏற்படும்போது, மக்களிடமே கடன் பெற்று அந்தத் திட்டங்களை நிறைவேற்றி, திட்டத்திற்கு பணம் ஒதுக்கப்படும்போது அதை எடுத்து கடன் வாங்கிய மக்களிடம் திரும்பித் தந்தது என்பது பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஒரு புதுமைச் செயல்பாடு.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் வந்த திட்டச் செயல்பாடு பல இடங்களில் ஊழலாக செயல்படும்போது இந்தப் பஞ்சாயத்தில் நீர்நிலைகளை உருவாக்கவும், நிழற்குடை அமைக்கவும் பயன்படுத்தி சொத்துக்களை உருவாக்கியிருப்பது அடுத்த கட்டச் சாதனையாகும்.
பெண்களுக்குத் திறன் வளர்ப்பு பயிற்சியளித்து, கடன் வசதிகளை செய்து தந்து உற்பத்திக்கும், உற்பத்தி செய்த பொருளை விற்பதற்கும் உதவி செய்தது அடுத்த மகத்தான சாதனையை இந்தப் பஞ்சாயத்து செய்துள்ளது.
பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் எல்லா பொது நிகழ்வுகளிலும் பங்கெடுக்க தயார் செய்து செயல்பட்டது மக்கள் எப்போதும் சோம்பித் திரியாமல் மேம்பாட்டுச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தது மிகப்பெரிய மாற்றமாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நெகிழி இல்லாப் பஞ்சாயத்து என அறிவித்து அனைத்து இல்லங்களுக்கும் சணல் பையை வாங்கி உபயோகத்திற்கு வினியோகித்த அடுத்த மேம்பாட்டுப் பணியாகும்.
பள்ளி மேலாண்மைக்குழுவை நடத்துவதில் முன்மாதிரியாக விளங்குவது முத்துகாபட்டி பள்ளிகளும், உள்ளாட்சியும்தான்.
எனவே முத்துகாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கும் குழுவில் பயிற்றுனராக கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து மக்களை ஊக்கப்படுத்தவும் பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தவும் தலைசிறந்த முன் மாதிரி ஆளுமைகளை வரவழைத்து மக்களுடன் உரையாட வைப்பது மக்களின் விழிப்புணர்வைக் கூட்ட உதவிடும் ஒரு செயலாகும்.
நீர் மேலாண்மைக்கு தடுப்பணை கட்டுதல் பண்ணைக் குட்டை அமைத்தல், மழைநீர் சேகரிக்க திட்டமிட்டுச் செயல்படுத்துதல் என்பது மேம்பாட்டுச் செயல்பாடுகளில் அடுத்த பரிநாம வளர்ச்சி என்று பார்க்கத் தோன்றுகின்றது.
பெருந்தொற்று காலத்தில் வார்டு உறுப்பினர்களின் துணை கொண்டு மக்களை தொற்றிலிருந்து பாதுகாத்தது, அடுத்து தடுப்பூசி போடுவதற்கு மற்றவர்கள் அனைவரும் தயங்கியபோது இந்தப் பஞ்சாயத்தில் முகாம் அமைத்து முதல் முறையும் இரண்டாவது முறையும் தடுப்பூசி போட செயல்பட்டது அரசின் பாராட்டைப் பெற்றது இந்தப் பஞ்சாயத்து.
பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து கபசுரக் குடிநீர் மக்களுக்கு அளித்தும் ஆரோக்ய உணவிற்கான புரிதலை ஏற்படுத்தி மக்களை விழிப்புடன் செயல்படச் செய்தது மக்களுக்கு பஞ்சாயத்துச் செயல்பாட்டின்மீது நம்பிக்கையைக் கூட்டியது.
அந்தக் கிராமப் பஞ்சாயத்திற்கு கள ஆய்வுக்குச் சென்றபோது, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் அனைவரும் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களைச் சந்தித்து உரையாடினோம். அதேபோல் அந்தப் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களைச் சந்தித்தோம்.
அடுத்து கிராமசபை உறுப்பினர்களை ஒரு தனியாருக்குச் சொந்தமான அரங்கில் சந்தித்து உரையாடினோம்.
அடுத்து அந்தப் பஞ்சாயத்தில் பணிபுரியும் வேளாண்துறை அலுவலர்கள், கால்நடைத்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் அனைவரையும் சந்தித்து உரையாடினோம்.
அந்த ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களையும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்தோம், உரையாடினோம். நூறு நாள் பணியில் இருந்த பெண்களைச் சந்தித்து உரையாடினோம்.
கடைசியாக அன்று மாலை சுய உதவிக்குழுப் பெண்களுடன் உரையாடி விட்டு, அவர்களின் அங்காடி ஒன்று அன்று அந்த ஊரில் திறந்தார்கள். அதிலும் பங்கெடுத்தோம்.
அந்த கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் மிகப்பெரிய அளவில் மூலதனம் செலவிட்டு பொதுச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த ஊரில் கூட்டுறவு சங்கம் மிகப்பெரிய அளவில் செயல்படுவதையும் பார்க்க முடிந்தது.
அங்கு வாழும் வசதி படைத்தவர்கள் பெருங்கொடையாளர்களாக பஞ்சாயத்துக்கு இருப்பது ஒரு சிறப்பு.
காரணம் பஞ்சாயத்து என்பது ஒரு கூட்டுச் செயல்பாட்டுக் களமாக மாறிவிட்டது என்று அனைவரும் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
அத்துடன் அந்தப் பஞ்சாயத்து என்பது ஊர் பொதுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது. எனவே பஞ்சாயத்து இனி எக்காலத்திலும் ஊழல் செய்ய முடியாது.
அதேபோல் பஞ்சாயத்தின் முழு இயக்கத்திற்கும் இந்த அறக்கட்டளையின் ஆதரவு இன்றியமையாததாக உள்ளது.
அடுத்து மக்கள் பஞ்சாயத்தின் மேல் நம்பிக்கையற்று இருந்த சூழலை, இன்றைய தலைவரும், உப தலைவரும், வார்டு உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தைக் கொண்டு செயல்பட்டு பஞ்சாயத்து பணம் பிரிக்கும் இடமல்ல, மக்களுக்கான சேவை மையம் எனக் கொண்டுவந்துவிட்டனர்.
பஞ்சாயத்து அலுவலகம் என்பது கேரளா பஞ்சாயத்து அலுவலகம் போல் மக்கள் தொடர்ந்து வந்து செல்லும் செயல்பாட்டுக் களமாக மாற்றப்பட்டுவிட்டது.
அதேபோல் அரசாங்கத்துறைகளுக்கு இந்த ஊர் பஞ்சாயத்து ஊழலில்லாமல் செயல்பாட்டில் ஒன்றி இருப்பது, அவர்களின் திட்டங்களை நிறைவேற்றி முன்னுதாரணமாகக் கொண்டுவர தகுதிமிக்கதாக உள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் இந்த ஊர் பஞ்சாயத்திடம் எந்த லஞ்சமும் பெறுவதில்லை.
நிறைய பார்வையாளர்கள் இங்கு வந்து செல்வது இந்தச் சூழலை உருவாக்க உதவிகரமாக உள்ளது.
இந்தப் பஞ்சாயத்துச் செயல்பாடுகளுக்கு மிகவும் பக்கபலமாக உள்ள அமெரிக்க செல்வம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினோம். அவர் மிகத் தெளிவாக ஒன்றைக் கூறினார். நான் சாதாரண பொதுப் பள்ளியில் படித்த ஏழை மாணவன்.
இன்று படித்து முன்னேற வேண்டும் என்ற ஆவலில் அமெரிக்கா வந்து செல்வம் சேர்த்தேன்.
எங்கள் ஊர் ஒற்றுமையின்றி, அமைதியின்றி, பகையுடன் இருந்தது. அதை இந்த தலைவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வந்தாலும், ஒற்றுமையாக அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்று சிந்தித்தது பெருமையாக இருக்கிறது.
இவரை ஆதரிக்காமல் நான் யாரை ஆதரிப்பது.
எனவேதான் இவருக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்து நம் ஊரை மேம்படுத்தி முன்னுதாரண பஞ்சாயத்தாக மாற்ற வேண்டும் என்று செயல்படுபவருக்கு உதவியாக இருக்கிறேன் என்றார்.
அனைத்து உரையாடல்களிலும் நாம் கண்டது, மக்களின் பெரும் தேவையாக கனவாக இருந்தது, அனைத்துத் தரப்பு மக்களின் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி.
அந்த உளவியலை புரிந்து அதிலிருந்து தன் பணியை ஆரம்பித்து மக்களின் நம்பிக்கையை சிறிது சிறிதாகப் பெற்று தன்மீது வைத்த நம்பிக்கையை பஞ்சாயத்தின்மீது வைக்கும் அளவுக்கு பஞ்சாயத்தின் உபதலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் பொதுச்சேவையில் பயணிக்க வைத்துவிட்டார்.
பல பஞ்சாயத்துக்களில் பார்ப்பதுபோல் பஞ்சாயத்து உறுப்பினர்கள், உதவித் தலைவர், தலைவர் இவர்களுக்குள் எந்தப் பிணக்கும் இல்லை. காரணம் எவரும் பணத்திற்காக அங்கு செயல்படவில்லை என்பதுதான்.
அங்கு நிதி செலவிடுகையில் ஒரு கட்டுப்பாட்டை வைத்துச் செயல்படுகின்றனர். என் வார்டுக்கு எவ்வளவு என்று நிதி பிரிப்பதில்லை, எங்கு தேவை இருக்கிறதோ அங்கு செயல்பாடு நடக்கிறது. அதை மக்களிடம் விளக்கி மக்களை புரிய வைக்கின்றனர்.
அந்த விதத்தில் இந்த பஞ்சாயத்து வித்தியாசமான பஞ்சாயத்து. இவைகளெல்லாம் கூறுகின்றபோது அங்கு தேவையில்லாமலில்லை. நிறைய தேவைகள் இருக்கின்றன.
அவைகளையெல்லாம் படிப்படியாக செய்து முடிக்க கிராமத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்படுவது ஒரு தனிச்சிறப்பு. அதற்கு மிஷன் சம்ருதி என்ற நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
– டாக்டர் க.பழனித்துரை
– (தொடரும்)