- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் 21-ம் தேதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோன்று தொழிற்சங்கங்களும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் தொமுச, சிஐடியுசி, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், எல்எல்எப் உள்ளிட்ட 14 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும்,
குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது எனவும்,
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 12 மணி நேர வேலை சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.