யானை முகத்தான் – ஸ்லோட்ராமா!

குடும்பச் சித்திரம் என்ற பெயரில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த படங்களை உருவாக்கும் வேலை நெடுங்காலமாக நடந்து வருகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பல அப்படித்தான் இருக்கின்றன. அதனால், அதற்குத் தனியாக உதாரணம் காட்ட வேண்டியதில்லை.

ஆங்கிலத்தில் ‘பேமிலி மூவிஸ்’ என்று குடும்பத்தோடு பார்க்கும்படியான படங்களைத் தனியாக வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். நம்மூரில் பக்திப்படம் என்று சொல்பவையும் கூட அதில் அடங்கும்.

அவை வெறுமனே புராண, இதிகாசத் தகவல்களைச் சொல்வதாக இல்லாமல், இன்றைய சூழலில் மனிதநேயத்தின் அவசியத்தைப் புரியவைக்கும் படங்களாகவும் கூட இருக்கும்.

யோகிபாபு, ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘யானை முகத்தான்’ படம் பார்த்தபோது, அது நிச்சயம் மேற்சொன்ன குடும்பப் படம் வரிசையில் சேரும் என்று தோன்றியது.

இது கணேசனின் கதை..!

‘கடவுள் எப்படியிருப்பார்’ என்று ஒரு சிறுவன் தனக்குத் தெரிந்த மனிதர் ஒருவரிடம் கேள்விகளாக அடுக்குவதில் தொடங்குகிறது ‘யானை முகத்தான்’ திரைக்கதை. எதிரேயிருக்கும் மனிதர் தான் கடவுள் என்று அந்த சிறுவனுக்குத் தெரிய வருவதோடு படம் முடிவடைகிறது.

இதற்கிடையே, இந்த உலகில் பக்தி என்ற பெயரில் என்னவெல்லாம் அட்ராசிட்டி செய்கின்றனர் என்பதற்கு உதாரணமாக கணேசனின் கதையை அந்தச் சிறுவனிடம் சொல்கிறார் கடவுள்.

ஏனென்றால், பிறரை ஏமாற்றுவதற்கும், உண்மை தெரிந்தவுடன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும் கடவுள் துணை நிற்க வேண்டுமென்று நம்பும் நபர் அந்த கணேசன். அவர் பிள்ளையாரின் தீவிர பக்தர்.

சென்னையில் பல ஆண்டுகளாக ஒரு வீட்டில் தங்கினாலும், அதற்கு ஒருமுறை கூட வாடகை கொடுப்பதாக இல்லை. வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான ஆட்டோவை ஒட்டிச் சம்பாதித்தாலும், அதற்கும் வாடகை தருவதில்லை.

இது தவிர, பலரிடம் கைநீட்டிக் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கமுடியாமல் பல பொய்களைச் சொல்லும் வழக்கமும் உண்டு.

எல்லாவற்றையும் செய்துவிட்டு, பிள்ளையாரே துணை என்றிருப்பது கணேசனின் வழக்கம். இது நெடுங்காலமாகத் தொடர்கிறது.

ஒருகட்டத்தில், கணேசனின் கண்களுக்கு விநாயகரின் சிலையோ, படமோ தெரிவதில்லை. அதற்கான காரணம் தெரியாமல் அவர் அல்லாடுகிறார். அந்த நேரத்தில், அவரது கண் முன்னே கடவுள் ‘எண்ட்ரி’யாகிறார். அதனை நம்ப மறுக்கிறார் கணேசன்.

ஒருநாள் மட்டும் பொய் பேசாமல், ஏமாற்றாமல், உண்மையானவராக வாழ்ந்தால், தான் கடவுள் என்று நம்பும்விதமாக விஸ்வரூபம் எடுப்பதாக உறுதியளிக்கிறார் கடவுள். அதை ஏற்றுக்கொண்டு செயல்பட முற்படும்போது, பல இடையூறுகளை எதிர்கொள்கிறார் கணேசன்.

முடிவில், தான் சந்தித்தது கடவுளைத்தான் என்று கணேசன் உணர்ந்தாரா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘யானை முகத்தான்’.

இதனைப் பக்திப்படம் என்று சொல்வதை விட, மனித மாண்பினை உணரும் படம் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த வகையில், இது கணேசன் எனும் தனிமனிதனின் கதை.

கௌரவ வேடத்தில் யோகிபாபு!

விளம்பரங்களில் யோகிபாபு முன்னிலைப்படுத்தப்படுவதற்கு ஏற்ப, இதில் அவருக்கு முக்கியப் பாத்திரம் தரப்பட்டுள்ளது. ஆனால், அது கௌரவ வேடம் தான்.

ஆமாம், அவரே இக்கதையில் பிள்ளையாராக வருகிறார். தன் வழக்கமான ‘பஞ்ச்’ வசனங்களைப் பேசி போரடித்தாலும், அவரது நடிப்பு துருத்தலாக இல்லை.

இந்த படத்தில் கதை நாயகன் ரமேஷ் திலக். அதனை உணர்ந்து, அவரும் கணேசன் எனும் பாத்திரத்தில் நிகழும் மாற்றங்களைச் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார்.

‘சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்’ எனும் போர்வையில் தவறுகளை வாரியிறைத்துவிட்டு, கடவுளிடம் சரண்டர் ஆகும் மனிதர்களை அப்பட்டமாகக் காட்டுகிறது அவரது பாத்திரம்.

ஊர்வசிக்கு இதில் பெரிய வேடமில்லை. ஆனால், அந்த பாத்திரத்தை வேறொருவர் ஏற்றிருந்தால் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. அவரோ, ‘ஜஸ்ட் லைக் தட்’ வந்து போயிருக்கிறார்.

ஹரீஷ் பேரடி, கருணாகரன், கிரேன் மனோகர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரேமாதிரியாக இருந்தாலும், அவர்களது இருப்பு போரடிக்கவில்லை.

கதை கேட்கும் சிறுவனாக வரும் நாக விஷால், கண் பார்வைத் திறனற்ற முதியவர் ராணா முகமது ஆக வரும் உதய் சந்திரா இருவருமே நம் கவனம் ஈர்க்கின்றனர்.

வீடு, மொட்டை மாடி, ஹோட்டல் என்று ‘இண்டோர்’ காட்சிகள் அதிகமிருந்தாலும், அவுட்டோர் காட்சிகளில் பரபரவென்று பரபரக்கிறது கார்த்திக்கின் ஒளிப்பதிவு.

பின்பாதி காட்சிகள் ‘உஸ்தாத் ஹோட்டல்’ உட்படக் கடந்த பத்தாண்டுகளில் பிரபலமான பல படங்களை நினைவூட்டுகிறது. ஷ்யாலோ சத்யனின் படத்தொகுப்பு, காட்சிகளை நேருக்கு நேராகப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

பரத் சங்கரின் இசையில் பாடல்களை விட சபீஷ் ஜார்ஜின் பின்னணி இசையே அதிகமும் ஈர்க்கிறது. எஸ்கேவின் கலை வடிவமைப்பு, யதார்த்தமாக ஒரு மலையாளப் படம் பார்த்த உணர்வினை ஏற்படுத்தவில்லை.

இயக்குனர் ரெஜிஷ் மிதிலா ஒரு வித்தியாசமான கதையுடன் தமிழுக்கு வந்திருக்கிறார். இது, அவர் மலையாளத்தில் இயக்கிய ‘இன்னு முதல்’ படத்தின் தமிழாக்கம்.

கடவுள் குறித்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிப்பது போன்ற கதை என்றாலும், முழுக்கவே ஒரு மனிதன் உண்மையானவனாக மாறுவதற்கு முக்கியத்துவம் தருகிறது.

‘அன்பே சிவம்’, ‘நான் கடவுள்’ என்ற சொற்பிரயோகங்களின் இன்னொரு பதிப்பாகவே இந்த ‘யானை முகத்தான்’ விளங்குகிறது. அதுவே, இப்படத்தின் மீது ரசிகர்கள் கவனம் குவியக் காரணமாக உள்ளது.

ஸ்லோட்ராமா!

முதல் பாதியில் தன்னை விட்டுச் சென்ற பிள்ளையாரைக் கணேசன் எனும் பாத்திரம் நேருக்கு நேராகப் பார்ப்பதுதான் ஹைலைட்டான விஷயம். அதுவரை கதையை நகர்த்தப் போராடியிருக்கிறார் இயக்குனர்.

அதனால் இந்த படத்தை ‘மெலோட்ராமா’ என்று சொல்வதை விடவும் ‘ஸ்லோட்ராமா’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.

என்னதான் ஒரு மனிதன் மனம் திருந்தும் கதை என்றாலும், இவ்வளவு மெதுவாகக் காட்சிகள் நகர்ந்தால் ஒரு ரசிகன் என்னதான் செய்வான்?.

கணேசன் விதவிதமாக ஏமாற்றுகிறான் என்பதை உணர்த்துவதற்கேற்ப படத்தில் நிறைய காட்சிகள் இல்லை. அதேபோல, தான் சம்பாதிப்பதை மது அருந்தவே பயன்படுத்துகிறான் என்பதைக் குறிக்கும் காட்சிகளும் இல்லை.

அதனை நாமாக உணர வேண்டியிருக்கிறது. கணேசனுக்கு ஏன் இத்தனை கடன் சுமை, அதனைத் தீர்ப்பது குறித்த அக்கறை ஏன் இல்லை என்பது பற்றிய விளக்கங்களே இல்லை.

கணேசனின் கண்களுக்குப் பிள்ளையார் தெரியாமல் போவதுதான் கதையின் முதல் திருப்பம். போலவே, ராணா முகமது எனும் பாத்திரத்தைச் சந்தித்தபிறகு அவருடனே பயணிக்க வேண்டுமென்று எண்ணுவது இரண்டாவது திருப்பம்.

இவ்விரண்டுக்கும் நடுவே, பிள்ளையாரை நேருக்கு நேராக கணேசன் சந்திப்பதும் அதனை நம்ப மறுப்பதும் இழுவையாக உள்ளது. கொஞ்சம் மெனக்கெட்டு மாற்றங்களைச் சேர்த்திருந்தால், இந்த கதை நகர்வையே இன்னும் செறிவுமிக்கதாக மாற்றியிருக்கலாம்.

ஊர்வசி பாத்திரத்தின் பின்னணியைச் சொன்ன அளவுக்கு, உதய் சந்திரா பாத்திரத்தைச் சொன்ன அளவுக்கு, கருணாகரன் குடும்பம் பற்றிச் சொல்லப்படவில்லை.

பின்பாதியில் உதய் சந்திராவின் ஊரைத் தேடி அலையும் காட்சிகளும் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.

அனைத்தையும் தாண்டி, படத்தைக் கண் இமைக்காமல் பார்க்கக் காரணமாயிருப்பது முடிவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம்.

அதேநேரத்தில், ஏமாற்றுவதால் கிடைக்கும் பலன்களைவிட, உண்மையாக வாழ்வதால் அனுபவிக்கும் இனிமையின் அளவு அதிகம் என்பதை இன்னும் உரக்கச் சொல்லியிருக்கலாம். அதுவே, இந்த கதைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

‘ஒன்றே தேவன்’ என்பதையோ அல்லது மனிதம் மட்டுமே போதும் என்ற நினைப்பையோ கொண்டிருந்தால், ‘யானை முகத்தான்’ உங்களுக்குப் பிடிக்கும்.

ஆனால், அதற்காக மட்டுமே நிறைய பொறுமையோடு பல காட்சிகளைச் சகிக்க வேண்டும் என்பதுதான் கொஞ்சம் கொடுமையான விஷயம்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment