நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நெல்லையில் முகாமிட்ட அவரிடம், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 15 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விசாரணை தொடர்பாக அரசுக்கு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த அமுதா, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் பலவீர் சிங்கின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரியாக உலகராணி நியமிக்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து பல்வீர் சிங் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் மற்றும் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி உலகராணியிடம் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொன் ரகு ஒப்படைத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.