ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்ட வனப்பகுதி அருகே பிம்பர் காலி என்ற இடத்தில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், ராணுவ லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
மளமளவென பற்றிய தீ, வாகனம் முழுவதும் பரவியது. இதில் 5 வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மழையை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக வடக்குப் பிராந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தீவிரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ராணுவ வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நேரிட்ட உயிரிழப்பை அறிந்து துயரடைந்தேன். இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் அடையாளங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹர்கிருஷ்ணன் சிங், சிப்பாய் சேவாக் சிங் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது.
லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால் ஓடிசை மாநிலத்தைச் சேர்ந்தவர். மற்ற 4 பேரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் 5 பேரும் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படைப் பிரிவின் 16வது கார்ப்பைச் சேர்ந்தவர்களாவர்.
நக்ரோடாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இவர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.