மயில்சாமி இறுதியாக நடித்த விழிப்புணர்வு குறும்படம்!

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி.

திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவர் தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’ என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரேகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தக் குறும்படத்தை A.ராகுல் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் மற்றும் மயில்சாமியின் மகன் அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நடிகை ரேகா நாயர், “மனிதர்களை, விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்று தொடர்ந்து சமூக அவலங்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் எனக்கு இந்த படம் கிடைத்தது ஒரு கிப்ட் என்றே சொல்லலாம்.

விளம்பரங்கள் பொதுமக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதனால் விளம்பரத்தில் யார் நடித்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அதன் உண்மைத் தன்மை அறியாமல் நடிக்க வேண்டியது இல்லை. நமக்கென ஆறாம் அறிவு இருக்கு.. அதைப் பயன்படுத்தி ஆராய்ந்து நடியுங்கள்” என்றார்.

மயில்சாமியின் மகன் அன்பு, “என்னுடைய தந்தை படப்பிடிப்புத் தளங்களில் ஒரு இடத்தில் கூட உட்கார மாட்டார். சுற்றிக்கொண்டே இருப்பார். எல்லோர் மீதும் அன்பு காட்டுவார்.

என் அப்பாவின் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக்கொண்டது பெரியவங்க சொல்ற பேச்சை கேளுங்க.. உங்களுக்கு என தனியாக நினைவுகளை ஞாபகங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான்” என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வைத் தந்தன.

எம்ஜிஆரின் உண்மைத் தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி.

அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார்” என்று கூறினார்.

இயக்குனர் A.ராகுல், “இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு முதலில் திட்டமிட்டோம்.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே இருந்தோம்.

எடுத்தவரை ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்களிடம் சேர்த்துவிடலாம் என ஒரு தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்” என்றார் நெகிழ்வுடன்.

Comments (0)
Add Comment