மொழிகளைக் கடந்து மக்களை ஈர்த்த ‘அயோத்தி’!

சமுத்திரக்கனி பேச்சு!

இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது.

விழாவில் பேசிய இயக்குநர் மந்திரமூர்த்தி, “இந்தப் படம் ரிலீஸான பிறகு எல்லோரும் சொன்னது:

இந்தப் படம் சரியான சமயத்தில் சரியான கருத்துடன் வந்திருக்கிறது என்றார்கள் அது என் மூலம் நடந்திருக்கிறது, அவ்வளவுதான். அதற்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி.

சசி சார் ஒத்துக்கொண்டிருக்கா விட்டால் இந்தப் படம் நடந்திருக்காது.

தனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், ஒதுங்கி நின்று நடித்தார்.

வேறு எந்த நடிகரும் செய்திருக்க மாட்டார்கள். சசி அண்ணாவிற்கு நன்றி” என்றார்.

இயக்குநர், நடிகர் சமுத்திரகனி, “ஒரு படம் 10 வருடம் 20 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப் படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும்.

இந்தப்படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள். இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. நீங்கள் பாருங்கள் தெலுங்கில், நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம்.

என் சகோதரர்தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன். இந்தப் படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது அது தான் உண்மையான வெற்றி” என்று வாழ்த்தினார்.

நடிகர் இயக்குநர் சசிகுமார் பேசும்போது, “படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை.

ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது.

இந்தப் படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன்.

ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி” என்றார்.

Comments (0)
Add Comment