நபி(ஸல்) அவர்களது ஏழ்மை நிலை!

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

‘ஒரு பிறை மாதம் சென்று விடும். பிறகு இரண்டாவது பிறையும் மாதமும் சென்றுவிடும். ஆனால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ரொட்டி சுடுவதற்கோ, வேறு ஏதேனும் சமைப்பதற்கோ நெருப்பு எரிக்கப்படாது’ என்றதும், அவர்களது மாணவர்கள், ‘யா ஹழ்ரத் அபூஹுரைரா அவர்களே! வேறு எதை வைத்து வாழ்வைக் கழித்தார்கள்’ என்று வினவினர்.

தண்ணீரும், பேரீத்தம் பழமும்தான். எனினும் அவர்களின் அண்டை வீட்டாரான மதீனா தோழர்கள் சிலர் அன்ஸாரிகள் இருந்தனர்.

அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக! அவர்களிடம் பால் புகட்டும் கால்நடைகள் இருந்தன.

அதன் மூலம் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்குப் பால் அனுப்பி வைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம் சகோதரியின் மகன் உர்வா(ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்:

‘என் சகோதரியின் மகனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு பிறையைப் பார்ப்போம்.

பிறகு அடுத்த பிறை, பிறகு அடுத்த பிறை என இரு மாதத்தில் மூன்று பிறைகளைப் பார்த்து விடுவோம்.

ஆனால் நபி(ஸல்) அவர்களின் வீடுகளில் எவ்வீட்டிலும் அடுப்பு எரிக்கப்படவில்லை’ என்று கூறினார்கள்.

ஹழ்ரத் உர்வா (ரலி) அவர்கள், ‘என் சிற்றன்னையே! அப்படியானால் உங்களுக்கு எது உணவாக இருந்தது?’ என்று கேட்டார்.

‘தண்ணீரும் பேரீத்தம் பழமும்தான்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

எனினும், மதீனாவில் அன்ஸார்கள் இருந்தனர். அவர்களிடம் பால் கொடுக்கும் ஒட்டகங்கள் இருந்தன. அவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குப் பாலை அனுப்பி வைப்பார்கள். அதை நாங்களும் அருந்துவோம் என்று கூறினார்கள்.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களும், அன்னாரின் குடும்பத்தார்களும் இரவு உணவு கிடைக்காமல் பசியால் தொடர்ந்து பல இரவுகளைக் கழித்திருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான உணவு தொலிக் கோதுமை ரொட்டிதான்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தங்கள் மகள் ஃபாத்திமாவிடம், ‘அது என்ன?’ என்று கேட்டார்கள்.

அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து வந்த ரொட்டித் துண்டுகளாகும்.

எனக்கு இது கிடைத்ததும், தங்களுக்குத் தராமல் சாப்பிட என் மனம் விரும்பவில்லை’ என்று கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமாவே! மூன்று நாட்களுக்குப் பிறகு உன் தந்தை வயிற்றுக்குச் செல்லும் உணவாகும்’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எப்போதும் வயிறு நிரம்ப சாப்பிடுவதை விரும்பவில்லை.

ஒருமுறை உஹது மலையின் வழியாக கடும் பசியில் செல்லும் போது, உஹது மலை அண்ணலாரிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னைத் தங்கமாக்கிவிடு என்று நாடினால், நான் தங்கமாக ஆகி விடுகிறேன்.

தங்களின் வறுமை நிலையில் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறியது.

அப்போது நபி(ஸல்) அவர்கள்,

‘யா அல்லாஹ்! ஒரு நேரம் நான் சாப்பிட வேண்டும் – உனக்கு நன்றி செலுத்துவதற்காக வேறொரு நேரம் நான் பசியாக இருக்க வேண்டும் உன்னிடம் பொறுமை செய்வதற்காக!’ என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

இஸ்லாம் டைரி (மார்ச்: 2021)என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment