முல்லைப் பெரியாறு பற்றி அறிக்கை தாக்கல் செய்க!

உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது என்று வாதிட்டார்.

அணை உள்ள பகுதிக்கு பெரிய கருவிகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

மேலும், அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் தாக்கல் செய்த வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து அனைத்து அணைகளையும் பாதுகாக்க தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், அணையின் பாதுகாப்பு அம்சங்களை கவனிக்கும் அதிகாரம் அந்த அமைப்பிற்கு உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு 2 வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தது.

அதன்பின்னர்,  தேசிய அணை பாதுகாப்பு சட்டப்படி மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

3 குழுக்கள் இந்த அமைப்பில் இடம்பெறும் என்றும், ஒவ்வொரு குழுவிலும் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment