திருவள்ளூர் அருகே பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பரமசிவம்.
திடீர் நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்பதை அறிந்த அவர், நேரடியாக அந்த கிராமத்திற்கே சென்று கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 24 மணி நேரமும் உதவி செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும், கூப்பிடும் தூரத்தில் காவல் நிலையம் உள்ளதால் எந்நேரமும் உதவி கேட்கலாம் எனவும், பள்ளி கட்டணம், சாப்பாடு, கணவனால் பிரச்சினை என அனைத்துக்கும் உதவி செய்யப்படும் எனவும், 5 நாட்கள் பள்ளகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுவதாகவும், யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன் எனவும் கூறுகிறார்.
ஒன்றிய அரசின் சர்வ சிக்சான் அபியான் திட்டத்தில் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்கப்படுவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால், பெற்றோரே குற்றவாளி எனவும், தப்பு செய்பவர்களை கூட விட்டு விடலாம், ஆனால், குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பதை விட முடியாது எனவும், குழந்தைகளுக்கு விஷம் கொடுப்பது போல் எனவும், தப்பான மூட நம்பிக்கையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்காதீங்க என அவர் விழிப்புணர்வு செய்யும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் அது பொது மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதனிடையே பரமசிவத்தின் மனிதநேய மிக்க இந்த செயலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மக்களைப் பாதுகாப்பதும் மட்டும் காவலரின் பணி என்று இல்லாமல் சமூக மாற்றத்தை உருவாக்க நினைத்த காவலர் பரமசிவத்திற்கு பாராட்டும் வாழ்த்தும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ இணைப்பு கீழே;
https://www.youtube.com/watch?v=NDMxAO47tks&ab_channel=MohanRaj