திருவின் குரல் – ஒரு பக்கக் கதை!

அருள்நிதியின் படங்கள் என்றால் த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் மூன்றும் கலந்தே இருக்கும் என்றாகிவிட்டது.

அதற்கேற்ப, கடந்தாண்டில் வெளியான டி பிளாக், தேஜாவூ, டைரி மூன்றும் ‘த்ரில்’ உணர்வை நிறைத்து வைத்திருந்தன. அவை உருவாக்கிய எதிர்பார்ப்பிற்கேற்ப அடுத்த படத்தைத் தந்திருக்கிறார் அருள்நிதி.

புதுமுக இயக்குனர் ஹரீஷ் பிரபுவின் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையில் அருள்நிதி, ஆத்மிகா, பாரதிராஜா, சுபத்ரா, அஷ்ரஃப், ஹரீஷ் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திருவின் குரல்’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

இப்படமும் த்ரில்லர் சுவையைக் கொண்டிருக்கிறதா?

எளிமையான கதை!

பேச்சுத் திறனற்ற, செவித்திறன் குறைவைக் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி திரு (அருள்நிதி). தந்தை மாரிமுத்து (பாரதிராஜா), பாட்டி உடன் வாழ்ந்து வருகிறார். கட்டடம் கட்டும் காண்ட்ராக்டர் ஆக இருந்துவரும் மாரிமுத்துவுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

திருவின் சகோதரி (சுபத்ரா), தனது மகள் (மோனிகா சிவா) உடன் வசித்து வருகிறார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அதனால், அவர்களைக் குறையில்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டுமென்ற துடிப்புடன் இருக்கிறார் திரு.

அத்தை மகள் பவானி (ஆத்மிகா) உடன் திருவுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. அவர்களது குடும்பமும் அருகிலேயே வசிக்கிறது.

எல்லாமே இனிமையாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், கட்டட வேலை நடக்குமிடத்தில் ஏற்படும் விபத்தினால் மாரிமுத்து பலத்த காயமடைகிறார்.

சிகிச்சைக்காக, அவரை ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் திரு.

அங்கிருக்கும் லிப்ட் ஆபரேட்டர் ஆறுமுகம் (அஷ்ரஃப்), திருவின் சகோதரியையும் பவானியையும் நோக்கி வீசும் பார்வை அருவெருப்பூட்டுவதாக இருக்கிறது.

சிறிதாக ஒரு பிரச்சனை என்றாலே அடிதடியில் இறங்கிவிடும் திருவுக்கு, அச்செயல் ஆத்திரத்தை ஊட்டுகிறது. ஒருநாள் டீக்கடையில் உண்டான தகராறில் ஆறுமுகத்தை ஓங்கி அறைந்துவிடுகிறார் திரு.

அந்த மருத்துவமனையிலுள்ள வார்டு பாய் (ஏ.ஆர்.ஜீவா), வாட்ச்மேன் (ஹரீஷ் சோமசுந்தரம்), பிணவறை ஊழியர் (மகேந்திரன்) உடன் சேர்ந்து கூலிப்படையினராகக் கொலைகளும் செய்பவர் ஆறுமுகம்.

அவர்கள் செய்யும் கொலையொன்றை அறிந்து விடுகிறார் திருவின் சகோதரி மகள்.

சாட்சியங்கள் இல்லாமல் கொலைகள் செய்யும் ஆறுமுகம் கும்பலுக்குத் திருவும் அவரது சகோதரி மகளும் இடையூறாக இருக்கின்றனர்.

நேருக்கு நேராகத் திரு உடன் மோத முடியாது என்பதை உணரும் ஆறுமுகம், தன் சகாக்களுடன் சேர்ந்து திருவின் தந்தையை மெல்ல மெல்லச் சாகடிக்கும் சதியொன்றை அரங்கேற்றுகிறார்.

மருத்துவமனையில் திரு அலைந்து திரிந்து அல்லாட வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.

ஆறுமுகம் கும்பலின் சதிக்குத் திரு பலியானாரா? திருவின் தந்தை உயிர் பிழைத்தாரா என்று சொல்கிறது ‘திருவின் குரல்’.

உண்மையைச் சொன்னால், ஒரு பக்கத்தில் எழுதிவிடக் கூடிய கதை இது. ஆனால், திரைக்கதையில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தந்து சென்டிமெண்டை கலக்கத் திணறியிருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் பிரபு.

அதிரடி ஆக்‌ஷன்!

அறிமுகப் படமான ‘வம்சம்’ முதல் தன் படங்களில் ஆக்‌ஷன் அதிகமாக இடம்பெற வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறார் அருள்நிதி. ‘திருவின் குரல்’ படத்தில் அதுவே பிரதானமாக இருக்கிறது.

பேச்சுத்திறன் குறைபாடுடையவர் என்பதோடு, தொட்டதற்கெல்லாம் கோபப்படுபவர் என்ற குணாதிசயமும் ‘அதிரடி ஆக்‌ஷனை’ வெளிக்காட்ட எளிதாக உதவுகிறது.

ஆனால், இந்த படத்தில் நகைச்சுவையை வெளிப்படுத்த அருள்நிதிக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

செல்லக் கோபம், கொஞ்சம் கொஞ்சல் என்று அருள்நிதி உடன் இரண்டொரு காட்சிகளில் தோன்றிவிட்டு மறைந்துவிடுகிறார் ஆத்மிகா.

அவரது பாத்திரம் என்னவானது என்று இரண்டாம் பாதியில் காட்டப்படாமல் விட்டிருப்பது பெரிய மைனஸ்.

சிறுமி மோனிகா சிவாவுக்கு இதில் முக்கியப் பாத்திரம். அவரும் தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கிறார். அவரது தாயாக வரும் சுபத்ராவும் ஒரு சாதாரணப் பெண்ணை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்.

ஆத்மிகாவின் தாய், அருள்நிதியின் பாட்டி, இன்ஸ்பெக்டராக வரும் விநாயக்ராஜ், டாக்டர் வேணுகோபாலாக நடித்தவர், நர்ஸ் ஆக வரும் முல்லையரசி என்று பலருக்கு இதில் முகம் காட்ட வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

வில்லன்களாக வரும் அஷ்ரஃப், ஹரீஷ் சோமசுந்தரம், ஏ.ஆர்.ஜீவா, மகேந்திரன் நால்வருமே மிரட்டியிருக்கின்றனர்.

‘புதுப்பேட்டை’ படத்தில் ‘அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்ற வசனத்தால் ஈர்த்த ஜீவாவுக்கு இதில் முக்கியமான வேடம். எவ்வளவு பெரிய கால இடைவெளி.

சண்டைக் காட்சிகள் வழக்கமான கமர்ஷியல் படம் போன்றே இருந்தாலும், ஒரேநேரத்தில் பலரை அடிப்பது போன்றோ, அடியாட்கள் வரிசையில் வந்து அடி வாங்குவது போன்றோ அவை அமைக்கப்படாதது ஆறுதல்.

அந்த வகையில் திலீப் சுப்பராயன், ஃபேண்டம் பிரதீப்பின் சண்டை வடிவமைப்பு அருமை.

ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளில் கதை சொல்லும் வித்தையைக் கைக்கொள்ளத் தவறியிருப்பதால் அவை வெறுமனே அடிதடியாகவே முடிந்து விடுகின்றன.

சாம் சி.எஸ். இசையில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. கேட்க இனிமையாக இருக்கின்றன. போலவே, பரபரப்பூட்டும் இடங்களில் பின்னணி இசையால் வேகம் கூட்டியிருக்கிறார் சாம்; தொடர்ந்து தனது படங்களில் பின்னணி இசைக்கு அவர் தந்துவரும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது.

கலை இயக்குனர் தியாகராஜன், திரையில் யதார்த்தம் மிளிர மெனக்கெட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சிண்டோ பொடுதாஸ் உழைப்பும் அப்படியே அமைந்திருக்கிறது. படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா ஒவ்வொரு காட்சியும் ‘நறுக்கு தெறித்தார் போல’ இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.

எல்லாமே ஓகே தான். ஆனால், இவர்களது உழைப்புக்குத் தகுந்தவாறு திரைக்கதை கனமாக இல்லை என்பதுதான் சோகம்.

சொல்லப்படாத தகவல்கள்!

திரு எனும் நபர் எத்தனை பாசமானவர், ஆக்ரோஷம் நிறைந்தவர் என்பதைத் தொடக்கக் காட்சியே சொல்லிவிடுகிறது.

அப்படியொரு நபர் மருத்துவமனையில் பணியாற்றும் சில கொடியவர்களோடு மோதுகிறார் என்பதுவரை வேகமெடுக்கும் திரைக்கதை, அதன்பின் அவர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைச் சொல்வதில் திணறியிருக்கிறது.

இந்த படத்தைப் பார்த்தபிறகு, மருத்துவமனையில் இருக்கும் பணியாளர்களைக் கண்டு சற்றே துணுக்குறுவது நிச்சயம்.

ஆனால், தாங்கள் செய்யும் குற்றங்களை அந்த பணிகளின் பின்னே எப்படிச் சாமர்த்தியமாக வில்லன் கும்பல் மறைக்கிறது என்பது திரைக்கதையில் சொல்லப்படவில்லை.

ஒரு பணக்கார சேட் குடும்பத்துடன் கொலை செய்யப்படுகிறார். அவர்கள் காரில் வருவது குறித்து தகவல் தந்த பெண்ணைக் கொடூரமாகக் கொல்கிறது வில்லன் கும்பல்.

டாக்டர் வேணுகோபாலை மிரட்டும் பெண்ணைக் வில்லன் கொல்கிறார். உண்மையை அறிந்துவிட்ட திருவின் சகோதரி மகளைக் கொல்ல, அவரது வீட்டுக்கே செல்கிறார். ஆனால், இந்த காட்சிகளுக்கான முன், பின் தகவல்கள் ஏதும் திரைக்கதையில் இல்லை.

முக்கியமாக, வில்லன் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது பணியிடங்களில் எப்படிப் பணியாற்றுகின்றனர், மேலதிகாரிகளை எப்படிச் சமாளிக்கின்றனர் போன்ற தகவல்கள் திரைக்கதையில் இல்லை.

அவற்றை இணைத்திருந்தால், தற்போதிருக்கும் இரண்டு மணி நேரத்தோடு கூடுதலாக அரை மணி நேரம் சேர்ந்திருக்கும். ஆனால், அவையே இந்தக் கதையை உயிர்ப்புமிக்கதாக மாற்றியிருக்கும்.

இயக்குனர் ஹரீஷ் பிரபு அதனைச் செய்யத் தவறினாரா அல்லது அக்காட்சிகள் வேண்டாம் என்று தவிர்க்கப்பட்டனவா என்று தெரியவில்லை. சொல்லப்படாமல் விடுபட்ட அத்தகவல்களே ’திருவின் குரலை’ப் பலவீனமாக்கியிருக்கிறது.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment