ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு.
அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின் ‘சொப்பனசுந்தரி’ காமெடியும் ஒன்றாகியிருக்கிறது.
கார் ஒன்றைத் தள்ளிக்கொண்டு செல்லும்போது நிகழும் உரையாடலாக அக்காட்சி அமைந்திருக்கும்.
அதே பாணியில், ஒரு காரை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படமே இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸின் ‘சொப்பன சுந்தரி’.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா, லட்சுமி பிரியா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி, சதீஷ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
கார் பரிசு!
ஏழ்மையில் தத்தளிக்கிறது அகல்யாவின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) குடும்பம். கல்யாண வயதைத் தாண்டி நிற்கும் சகோதரி தேன்மொழி (லட்சுமி பிரியா) பேசும் திறனற்றவர்; அதனாலேயே, அவருக்கு வரும் வரன்கள் விலகிப் போகின்றன.
வாழ்நாள் முழுக்கக் குடி போதையில் ஊறிவிட்டு, முதுமையில் படுக்கையே கதி என்று கிடக்கிறார் தந்தை. அவரைக் கவனித்துக் கொள்கிறார் தாய் செல்வி (தீபா). அகல்யா, தேன்மொழியோடு துரை (கருணாகரன்) என்றொரு மகனையும் அவர் பெற்றெடுத்திருக்கிறார்.
அப்பெண்ணின் சகோதரரோ (மைம் கோபி), துரையின் வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் வழித்துத் துடைத்துவிடும் எண்ணத்தோடு இருக்கிறார்.
ஒருநாள், அகல்யா வேலை பார்க்கும் நகைக்கடைக்குச் சென்று லட்ச ரூபாய் செலவில் நகைகள் வாங்குகிறார் துரை. ரசீதுடன் தரப்படும் பரிசு கூப்பனை அகல்யாவிடம் வீசி அவமானப்படுத்துகிறார்.
அந்த கூப்பனில் தனது பெயரை நிரப்பி பரிசுப்பெட்டியில் இடுகிறார் அகல்யா. சில நாட்கள் கழித்து, அந்த கூப்பனுக்கு கார் பரிசாகக் கிடைத்த தகவல் வெளியாகிறது.
உடனே, தேன்மொழியைத் திருமணம் செய்யும் நோக்கில் மாறன் (ஷரா) குடும்பமும் சம்பந்தம் பேச வருகிறது.
அந்த நல்ல செய்தி வந்த சில மணி நேரங்களில், அந்த கார் தனக்குச் சொந்தம் என்று துரையும் அவரது மனைவியின் உறவினர்களும் அகல்யாவிடம் தகராறு செய்கின்றனர். பிரச்சனையோடு சேர்ந்து அந்த காரும் காவல் நிலையம் செல்கிறது.
அவ்வழக்கைக் கையாளும் இன்ஸ்பெக்டர் கண்ணனோ (சுனில் ரெட்டி) அகல்யாவைத் தன் வலையில் விழ வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு திரிகிறார்.
அத்தனைக்கும் நடுவே, அந்த காரில் ஒரு பிச்சைக்காரரின் பிணம் இருப்பதாக மாறனும் தேன்மொழியும் இன்னொரு அதிர்ச்சியைப் பரிசளிக்கின்றனர்.
காரில் இருக்கும் பிணம் என்னவானது? தேன்மொழி – மாறன் திருமணம் நடந்ததா? இன்ஸ்பெக்டரின் டார்ச்சரில் இருந்து அகல்யா மீண்டாரா என்று சொல்கிறது ‘சொப்பன சுந்தரி’யின் மீதிப்பாதி.
கார் பரிசாக விழுவதில் இருந்து திரைக்கதை தொடங்குவது, ரசிகர்களுக்கு ப்ரெஷ்ஷான உணர்வைத் தரும்.
அதோடு சேர்ந்து மனம் விட்டுச் சிரிக்கும் அனுபவத்தையும் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவ்வாறு செய்யாத காரணத்தால், முழுக்க சீரியசான படம் பார்த்த மனதோடு வெளிவர வேண்டியிருக்கிறது.
தொடர் சறுக்கல்!
டிரைவர் ஜமுனா, கிரேட் இண்டியன் கிச்சன் படங்களில் முதன்மை இடத்தை வகித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ’ரன் பேபி ரன்’னிலும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தையே தேர்வு செய்திருந்தார். ‘சொப்பன சுந்தரி’யிலும் அதனைத் தொடர்ந்திருக்கிறார்.
ஆனால், மேற்சொன்ன படங்களைப் போலவே இதிலும் அடிப்படைக் கதை நன்றாக இருந்தபோதும், திரைக்கதை தரும் அனுபவம் திருப்தியாக இல்லை. அந்த வகையில், இதுவும் ஐஸ்வர்யாவுக்கு சறுக்கலைத் தந்திருக்கிறது.
கருணாகரன், மைம் கோபிக்கு தரப்பட்ட அளவுக்குக் கூட நடன இயக்குனர் சதீஷுக்குக் காட்சிகள் இல்லை.
இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகளே வந்தாலும், லேசாகச் சிரிக்க வைக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
சுனில் ரெட்டியின் வில்லத்தனம் கதையோட்டத்தோடு கலந்திருந்தாலும், அவரது நடிப்பு பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கத் தவறியிருக்கிறது.
’டாக்டர்’ படத்தைப் போலவே, இதிலும் தீபா சங்கரின் ‘அவல நகைச்சுவை’ சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. அதற்காக, கணவரின் சிறுநீரகத்தை என்ன செய்யலாம் என்று அவர் பேசுவதெல்லாம் நம் மூளையைத் திருகுகிறது.
லட்சுமி பிரியாவின் நடிப்பைச் சிலாகிக்க இரண்டொரு காட்சிகள் உண்டு; கருணாகரனின் மனைவியாக வரும் தென்றலும் கூட தன் வசன உச்சரிப்பால் நம்மை ஈர்க்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஷரா, ஜோர்ன் சரோ, அகஸ்டின் உட்பட மொத்தமாக ஒரு டஜன் நடிகர்களே திரையில் வந்து போகின்றனர்.
’பிளாக் ஹியூமர்’ மிளிர வேண்டுமென்றால், சரியான நடிப்புக் கலைஞர்கள் மட்டும் போதாது; அதற்கேற்ப திரைக்கதை வ்சனங்களும் சிறப்புற அமைய வேண்டும்.
சார்லஸின் எழுத்தாக்கம் அந்த வாய்ப்பினைத் தரவில்லை.
பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலனின் ஒளிப்பதிவு, புதிய உலகைத் தரிசிக்கிறோம் என்ற உணர்வை உண்டாக்குகிறது; சரத்குமாரின் படத்தொகுப்பு முதல் பாதியைச் சீராக நகர்த்த உதவினாலும், இரண்டாம் பாதியில் திருப்தி தருவதாக இல்லை.
அஜ்மல் தஹ்சீனின் பாடல்களும் சரி, விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் சரி, இயக்குனர் முன்வைக்கும் காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் உள்ளன.
காவல் நிலையத்திற்கு ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் சிரிப்பை ஏற்படுத்துவதில், பின்னணி இசைக்கும் பெரும் பங்குண்டு.
திருப்தியளிக்காத முயற்சி!
விதவிதமான பாத்திரங்கள், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகள், அவற்றைத் தீர்ப்பதற்கான போராட்டம், இடையிடையே ஏற்படும் குழப்பங்கள் என்று திரைக்கதையின் வழியே ’ஆடுபுலி ஆட்டம்’ ஆட முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
‘பிளாக் ஹ்யூமர்’ வழியே சிரிப்பூட்டலாம் என்று எண்ணியிருக்கிறார். அது முழுமையாக நிகழாததால் சிரிப்பு குறைந்து சீரியசாகவே பல காட்சிகள் நகர்கின்றன.
‘டாக்டர்’ படம் பார்த்த தாக்கத்தில், அதில் இடம்பெற்ற நடிகர் நடிகைகளை இதிலும் பயன்படுத்த விரும்பியிருக்கிறார் இயக்குனர்.
அது, படம் பார்க்கும் ரசிகர்களிடம் எளிதாகச் சிரிப்பை வரவழைக்கும் என்று நினைத்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், அதே தாக்கத்தோடு காட்சிகளையும் செறிவு நிறைந்ததாக அமைத்திருக்க வேண்டும்.
திரைக்கதையில் ஒரு கார் இடம்பெறுவதாலேயே ‘சொப்பனசுந்தரி’ என்ற பெயரைத் தேர்வு செய்திருக்கிறது படக்குழு.
அந்த டைட்டில்தான் தியேட்டருக்குள் ஒரு ரசிகன் நுழையக் காரணம்.
அதற்கான காரணமோ, காரியமோ திரைக்கதையில் எங்குமே இல்லை. இவ்வளவு ஏன், அந்த காமெடி காட்சியை நினைவுபடுத்தும் எந்த விஷயங்களுமே படத்தில் இல்லை.
அதனை உணரும்போது, ‘பேரு ஓகே, காமெடி எங்கே’ என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
– உதய் பாடகலிங்கம்