நூல் அறிமுகம்:
சமீபத்தில் நான் மிகவும் படித்து ரசித்த சிறுகதைத் தொகுப்பு, அன்பிற்கினிய நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சாரோன் எழுதிய நூலான ‘கரியோடன்’.
பெருங்கடலென விரிந்த குறிஞ்சி நிலத்தின் பெருமைக்குரிய வாழ்வு அனுபவத்தை சிறுகதைகளாக சுருக்கி வரைந்திருக்கிறார்.
அழகியல் நுட்பம் மிகுந்த எழுத்தின் வழியாக மிகப்பெரிய நிலப்பரப்பில் உழன்று திரியும் கதாபாத்திரங்களின் உளவியலை, எதார்த்த வாழ்வின் அற்புதங்களை ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குநரைப்போல காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறார்.
காற்றில் இணையின் வாசத்தை இனம் கண்டு நடக்கும் ஆணுடும்புபோல… சாரோன் எழுதிய என்னுரைகூட கதையைப்போலத்தான் இருக்கிறது.
“என் எழுத்துகளின் முதல் களம் நான் பிறந்து வளர்ந்த ஊரும், எங்களுக்கு வாழ்வு தந்த காடுகளும்தான்” என்கிறார்.
இன்னொரு பத்தியில், “மழையிரவு முடிந்த இளங்காலையின் ஈர வெயிலில் வீசு காற்றுள் காடே மணந்து கிடக்கும். ஆயிரக்கணக்கான மகரந்த இழைகளுள் கலந்திருக்கும் தன் இணை பெண் உடும்பின் தனித்த உடல் வாசத்தை கண்டெடுத்து நடக்கும்.
ஆண் உடும்பின் பயணத்தைப் போலத்தான் என் எழுத்துக்களுக்கான அனுபவங்களைக் கண்டெடுக்கிறேன்” என்று பேசுகிறார்.
சிறுகதைகள் முழுவதும் மேகங்களைப் போல கலைந்து மாறும் வேறு வேறான பருவநிலைகள், மலைக்காட்டில் பூத்திருக்கும் பெயர் தெரியாத பூக்கள், மரம், செடி கொடிகள், விலங்குகள் என விரவிக்கிடக்கின்றன.
நூலின் முதலில் வரும் ஈசல் வேட்டை சிறுகதை, பெருங்கதையாடலாக இருக்கிறது. கெட்டப் பய சார் இந்த காளி என்பதைப் போன்ற காளி கதாபாத்திரம்.
ஈரமும வீரமும் கொண்டவன். அடடா என வியக்கவைக்கும் கதாபாத்திர சித்திரிப்பு. கதையின் கடைசி வரிகள் மனத்தை கணக்கவைக்கின்றன.
அகவெளி வண்ணங்கள் சிறுகதை ஒரு மாறுபட்ட எழுத்தின் சாட்சி. மிக மிக கவனமாக வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கிறார் சாரோன்.
இந்தக் கதை கரணம் தப்பினால் மரண வகையைச் சேர்ந்தது. கொஞ்சம் நகர்ந்தால் வேறு பாதையில் சென்றுவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது கதைக்களன்.
லவ்சாதவும் கள்ளிக்காக்காவும் என்ற கதை சுவையான மலைக்காட்டு வாழ்வின் பதிவு. அந்தக் கதைக்குள் மலை மற்றும் காட்டைப் பற்றி அத்தனை விவரிப்புகள். வெறும் பார்வையாளராக அல்ல, அங்கு வாழ்ந்து பார்த்த ஒருவரால்தான் அப்படி எழுதமுடியும்.
சின்னச் சின்ன திரைப்படங்களாக எழுத்தில் காட்டி திகைக்கவைக்கும் சாரோனிடம் சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருக்கின்றன.
மலை, காடுகளின் கதையை பெரும் புதினமாக அவர் எழுதியாக வேண்டும்.
காடுகளைப் பற்றி எழுதும் சாரோனின் எழுத்து காலமெல்லாம் வற்றாத நதியாக பெருக்கெடுக்கிறது. நீங்களும் அந்த நதியில் நீரள்ளிப் பருகிப் பாருங்கள்.
விலை ரூ. 250/-
தொடர்புக்கு:
எதிர் வெளியீடு,
– 99425 11302