தாய் தலையங்கம் :
கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1300 பேர்கள் வரை கொரோனா பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்தார்கள்.
தற்போது கொரோனா சிகிச்சையில் தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை 502.
முன்பு மாதிரி கொரோனா பரிசோதனைகள் பரவலாக மேற்கொள்ளப்படாத நேரத்திலேயே இந்த அளவுக்குப் பாதிப்பு என்றால், முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் எந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கும்? தெரியவில்லை.
கொரோனா சிகிச்சைக்குப் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், முன்பு மாதிரி மத்திய, மாநில அரசுகள் கொரோனா சிகிச்சைக்காக நிதியை ஒதுக்கீடு செய்ததாகவும் தெரியவில்லை.
மருத்துவர்கள் தரப்பிலிருந்தும் தற்போது பரவிக் கொண்டிருக்கிற கொரோனா பரவல் குறித்து இரு வேறுவிதமான கருத்துகள் இருக்கின்றன. சிலர் தடுப்பு நடவடிகளை எடுக்கச் சொல்லி ஆயத்த நிலையில் இருக்கச் சொல்கிறார்கள்.
சிலர் ஏற்கனவே போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளால் இயல்பாகவே நோய்த்தடுப்பு சக்தி பலருக்கும் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கப் போவதில்லை; பயப்படவும் தேவையில்லை என்கிறார்கள்.
முகக்கவசம், சமூக இடைவெளி குறித்த அறிவுறுத்தல்கள் அரைகுறை நிலையிலேயே நிற்கின்றன.
முகக் கவசங்கள் இல்லாமல், சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் பொது இடங்களில் கூடுவதும் நின்ற பாடாக இல்லை. விழாக்களும், கொண்டாட்டங்களும் இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
உண்மையில் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? அதன் பரவல் எந்த அளவுக்குத் தீவிரம் பெற்றிருக்கிறது?
எத்தனை உயிர்கள் உண்மையில் அதற்குப் பலியாகி இருக்கின்றன?
கொரோனாப் பரவலை நாம் சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறோமா? அல்லது புரிந்து கொள்ளத் தவறிக் கொண்டிருக்கிறோமா?
இவை கொரோனா விஷயத்தில் பலருடைய மனங்களில் எதிரொலிக்கிற கேள்விகள் என்பது உண்மை.
#