ருத்ரன் – அடி அடி அதிரடி!

சில நடிகர், நடிகைகளின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருக்கும். அது மிகச்சரி என்பது போலவே அவர்களது படங்களும் அமையும்.

அந்த வகையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும், இயக்கும் படங்களைக் குறித்தும் சில அபிப்ராயங்கள் உண்டு. எண்பதுகளில் வெளிவந்த ரஜினி படங்களையே திரும்பப் பார்ப்பது போலிருக்கும். அவற்றில் தெலுங்கு பட சாயத்தைப் பூசினாற் போலிருக்கும்.

காஞ்சனா வரிசைப் படங்கள் மட்டுமல்லாமல், அவர் நடித்த ‘ராஜாதி ராஜா’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ படங்களும் அவ்வாறு அமைந்தவைதான். தற்போது வெளியாகியிருக்கும் ‘ருத்ரன்’ அந்த வரிசையில் சேர்கிறதா அல்லது தனித்துவமாகத் தெரிகிறதா?

என்னவொரு கதை!

சென்னை அடையாறு பகுதியில் வசிப்பவர் ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). அவரது பெற்றோர் தேவராஜ் – இந்திராணி (நாசர் – பூர்ணிமா).

தந்தை நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்தைப் பார்க்காமல், ஐடி நிறுவன வேலையைத் தேடுகிறார் ருத்ரன். அதற்குள் அவரது வயது முப்பதைத் தொட்டு விடுகிறது.

ஒருநாள், தற்செயலாக அனன்யாவைச் (பிரியா பவானி சங்கர்) சந்திக்கும் ருத்ரன், உடனடியாக அவர் மீது காதல் கொள்கிறார்.

பெற்றோர், நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற கூச்சமே இல்லாமல், அவர்களது முன்னிலையிலேயே காதல் வார்த்தைகளை வீசுகிறார்; சில நேரங்களில் அவர்களையே தூது அனுப்பவும் எண்ணுகிறார்.

ஒரு சுபயோக வேளையில், அனன்யாவும் ருத்ரனும் வாழ்வில் ஒன்றிணைகின்றனர். ருத்ரனுக்கும் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கிறது.

அந்த நேரத்தில், பார்ட்னர் ஒருவரின் மோசடியால் கடன் பிரச்சனைக்கு ஆளாகிறார் தேவராஜ். அதனால், மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கிறார்.

தந்தை வாங்கிய கடனுக்காக ருத்ரன் வீட்டை விற்கும் நிலை ஏற்படுகிறது. அதிலிருந்து தப்பிக்க, லண்டன் சென்று பணியாற்றும் முடிவுக்கு வருகிறார்.

வேலை, கடன் செட்டில்மெண்ட் என்றிருக்கும் நிலையில், அனன்யாவுக்கும் ருத்ரனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கும் நேரத்தில், அவசர அவசரமாக அனன்யா மட்டும் லண்டனில் இருந்து சென்னை திரும்புகிறார்.

அப்போது, தாய் இந்திராணி இறந்து போன தகவலை அறிகிறார் ருத்ரன். உடனடியாக, இந்தியா திரும்புபவருக்கு அனன்யா வீடு வந்து சேரவில்லை என்பது தெரிய வருகிறது.

அனன்யாவுக்கு என்னவானது என்று அறிய முற்படும்போது, அவர் இந்தியா திரும்பியது பற்றித் தெரிந்த நபர்கள் கொலையாகின்றனர்.

சட்ட விரோதமான செயல்களைச் செய்துவரும் பூமிநாதன் (சரத்குமார்) என்பவரே அதன் பின்னணியில் இருக்கிறார். அவரைத் தேடிச் செல்லும் ருத்ரன் என்னவானார் என்பதே இப்படத்தின் கதை.

மேற்சொன்ன கதையைக் கேட்டதும், ’ஆஹா, என்னவொரு கதை’ என்று மனதில் தோன்றுகிறதல்லவா?

அதனை உத்தேசித்தே, இந்த கதையை அப்படியே திரையில் காட்ட விரும்பியிருக்கிறார் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் கதிரேசன். ஆனால், அவையனைத்தும் நிறைவேறியதா என்று கேட்டால் தலையைச் சொறிய வேண்டியிருக்கிறது.

அடி தாங்க முடியாது!

‘ருத்ரன்’ படத்தை திரையில் பார்க்கும்போது, சில காட்சிகள் உடனடியாக நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும்; சிலவற்றைப் பார்க்கும்போது, முழுக்க அபத்தமாக இருப்பது தெரிந்தும் ’ரசிக்கலாமா’ என்ற எண்ணம் எட்டிப் பார்க்கும்.

காரணம், சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை. அந்தளவுக்குக் காட்சிகளை நம் மனதோடு இணைக்க முயற்சித்திருக்கிறது அவரது உழைப்பு.

’பகை முடி’, ‘உன்னோடு வாழும்’ பாடல்கள் நிச்சயம் ஜி.வி.பிரகாஷின் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிடும்.

போலவே, ஆப்ரோவின் ‘ஜோர்தாலே’ பாடலுக்கு ‘ருத்ரன்’ சாயம் பூசியிருப்பதும் கூட ஓகேவாக அமைந்திருக்கிறது.

தரண் குமாரின் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் இசையும் ரசிக்கத்தக்கது தான்.

திரையில் நான்கு பாடல்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

காரணம், அவற்றின் கொரியோகிராபி அபாரமானதாக அமைந்துள்ளது. ஆனால், ஒரு படத்தைப் பார்க்க பாடல்கள் மட்டுமே போதுமனதல்லவே!

ஒவ்வொரு பிரேமிலும் ஒளியமைப்பு, காட்சிக்கோணத்திற்கு மெனக்கெட்டிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். ‘காக்க காக்க’ காலத்திற்கு முன்னிருந்தே இதனைச் செய்து வருகிறார் என்பதால், அதனைச் சிலாகிக்கப் பெரிதாக ஏதுமில்லை.

படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் ஆண்டனியோ பாடல், சண்டைக்காட்சிகளை அழகாக ‘கட்’ செய்திருக்கிறார்; அந்த திருப்தியில் இதர காட்சிகளில் கை வைக்கவில்லை போல..!

’ருத்ரன்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருப்பவர் திருமாறன். அவரது ஸ்கிரிப்டை வாங்கி இயக்க வேண்டும் எனும் அளவுக்கு, என்ன அம்சம் தயாரிப்பாளர் கதிரேசனைத் தூண்டியது என்று தெரியவில்லை.

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படத்தைத் திரையில் காண்கிறோம் என்ற திருப்தியை மட்டுமே அவரது இயக்கம் தந்திருக்கிறது.

மற்றபடி, இந்த ஸ்கிரிப்ட் இன்றைய காலத்திற்கேற்ப அமைந்திருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இத்தனைக்கும் நாயகன் வில்லன் கூட்டத்தைப் பந்தாடுவதில் இருந்துதான் திரைக்கதை தொடங்குகிறது; பிளாஷ்பேக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நாயகன் வாழ்வில் வில்லன் எவ்வாறு புகுந்தார் என்பது காட்டப்படுகிறது.

அக்காட்சிகளில் ஒன்று கூட புதிதாகவோ, புத்துணர்வூட்டுவதாகவோ இல்லை என்பதுதான் ‘ருத்ரன்’ படத்தின் பெரிய பலவீனம். இத்தனைக்கும் அடிப்படைக் கதை பலமானதாக உள்ளது.

நடிப்பைப் பொறுத்தவரை, ராகவா லாரன்ஸ் தொடங்கி அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

அது நமக்குப் பிடித்தமானதாக அமைந்திருக்கிறதா என்ற கேள்வியை இந்த இடத்தில் முன்வைக்கக் கூடாது.

ரத்தக்களரியான ஒரு கதையில் புயல் போல நாயகன் இருந்தால், தென்றல் போலத்தானே நாயகி இருந்தாக வேண்டும். அப்படித்தான் இதில் பிரியா பவானி சங்கரைக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பூர்ணிமா பாக்யராஜ் – நாசர் ஜோடியின் நடிப்பு வழக்கம் போலிருக்கிறது. ஆனால், அவர்களது அன்னியோன்யம் தொடர்பாக லாரன்ஸ் பேசும் வசனங்களைத்தான் சகிக்க முடியவில்லை.

ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை திரையில் தோன்றும்போது ரசிகர்கள் ஆரவாரிக்கின்றனர்; ஆனால், அவர்களுக்கென்று காமெடி காட்சிகள் கொஞ்சம் கூட இல்லை.

காளி வெங்கட் மட்டும் தான் தோன்றும் காட்சிகளில் ரசிகர்கள் கொஞ்சமாவது சிரிக்கட்டுமே என்று நினைத்திருக்கிறார். அதுவும் பலனளிக்கவில்லை.

‘ருத்ரன்’ படத்தின் முக்கியமான அம்சம், வில்லனாக சரத்குமார் இடம்பெற்றிருப்பதுதான். அதற்கேற்ப, அவரும் திரையில் நியாயம் செய்திருக்கிறார்.

ஆனால், தொண்ணூறுகளில் சரத் வில்லனாக நடித்ததற்கும் இப்படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.

அவரது கையாட்களாக வருபவர்கள், சரத் லோகித்சவா, ராஜேஷ், ஜெயபிரகாஷ் என்று பலரும் ‘ஊறுகாய்’ போல தோன்றுகின்றனர்.

இவர்கள் தவிர்த்து ஐம்பது, நூறு பேராவது ஹீரோவிடம் அடி வாங்க வரிசையாக வந்து போயிருக்கின்றனர். அவரும், அவர்களை ‘அடி அடி அதிரடி’ என்று வெளுத்து வாங்குகிறார்.

போதுமப்பா..!

‘ருத்ரன்’ படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம்; அதற்கேற்ப ஸ்டன் சிவா, சில்வாவின் குழுவினர் நிறையவே உழைத்திருக்கின்றனர். அவர்கள் மூலமாக, விஎஃப்எக்ஸ் குழுவினரும் நிறையவே கண் விழித்திருக்கின்றனர்.

ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்ததும் உத்வேகம் தொற்றுவதற்குப் பதிலாக ‘அருவெருப்பு’ தான் மேலிடுகிறது. அந்த அளவுக்குத் திரையில் ரத்தம் நிறைந்து வழிகிறது.

கலகல காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ், அம்மா அப்பா செண்டிமெண்ட், குதூகலப்படுத்தும் நடனத்தைக் கொண்ட பாடல்களுடன் அதிரடி ஆக்‌ஷன் என்ற கலவையுடன் ஒரு கமர்ஷியல் படம் இருப்பதில் தவறில்லை.

அதை அச்சுஅசலாகப் பின்பற்றியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதுவும் தவறில்லை. ஆனால், வயது வந்தவர்களே அளறும் அளவுக்குத்தான் காட்சியமைப்பு உள்ளது.

இப்படியொரு படத்தை உருவாக்கிவிட்டு, அதனைக் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமானதாக விளம்பரப்படுத்துவதைத்தான் ஏற்க முடிவதில்லை.

‘ருத்ரன்’ படத்தின் கதை பெருநகரங்களில் தனியாக வசிக்கும் முதியோர்களைப் பற்றிப் பேசுகிறது; பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் பெரியவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய்விடுகின்றனர்; அவர்களது சொத்துகள் எவ்வாறு முறைகேடாகச் சூறையாடப்படுகின்றன என்பதைச் சொல்கிறது. இதன் சிறப்பம்சமும் அதுவே.

உண்மையைச் சொன்னால், மேற்சொன்ன கதையை வைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை காட்சிகளை வடித்திருக்கலாம்.

ஆனால், ‘ஏண்டா இந்த படத்திற்கு வந்தோம்’ என்று வருந்தும் வகையில் ஒவ்வொரு காட்சியும் திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

பெரும்பாலான காட்சிகளில் நாயகன் அடித்துக்கொண்டே இருக்கிறார்; ஒரு கட்டத்தில், அந்த வலியும் வேதனையும் நம்மைத் தொற்றுகிறது.

’போதுமப்பா.. போதும்’ என்று நம்மைச் சொல்ல வைக்கிறது.

இந்த லட்சணத்தில் ‘ருத்ரன் 2’ வரும் என்ற தகவலோடு முடிவடைகிறது இத்திரைப்படம். அதனைக் கண்டதும், ‘தெறித்து ஓடலாமா’ என்ற எண்ணம் மட்டுமே மனதில் மிஞ்சுகிறது.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment