5 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை!

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் – நாகலட்சுமி  தம்பதிக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நாகலட்சுமிக்கு மாவட்ட ஆட்சியர் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்றபோது மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி பணித்தள பொறுப்பாளர் வேலை உனக்கு தர இயலாது எனக் கூறி உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி மையிட்டான்பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளுடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது  சிவரகோட்டை அருகே உள்ள அனுமான் கோயில் அருகே பேருந்து வந்தபொழுது நாகலட்சுமி தன்னுடைய இரண்டு குழந்தைகளை அருகில் இருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவலறிந்த கள்ளிக்குடி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்கை பெற்றுவந்த நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Comments (0)
Add Comment