தமிழ் – யதார்த்தம் ததும்பும் ஆக்‌ஷன் படம்!

என்னதான் ஒரு படத்தில் பல கருத்துகளைப் புகுத்தினாலும், படம் பார்க்கும் ரசிகர்கள் ‘ஆஹா’ என்று சொல்லாவிட்டால் அவ்வளவுதான்!

அதனாலேயே, திரையரங்குகளில் மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுக்கும் கமர்ஷியல் திரைப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அப்படிப்பட்ட படங்களை எடுப்பது நிச்சயம் சாதாரண விஷயமல்ல.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற வகையில் சறுக்கலைச் சந்திக்கும் வாய்ப்புகள் அனேகம் இருக்கும். அவற்றைத் தாண்டி, பரபரவென்று நகரும் படமொன்றைப் படைப்பதும், எடுத்த வேகத்தில் அப்படைப்பைச் சீர்படுத்தி வெகுவேகமாக வெளியிடுவதும் மாபெரும் கலை.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ஒரு கலைஞன் இயக்குனர் ஹரி. அவர் முதன்முதலாக இயக்கிய ‘தமிழ்’ படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிறது.

மிளிரும் யதார்த்தம்!

வம்பு தும்புக்குச் செல்லாமல் ஒதுங்கிச் செல்லும் ஒரு குடும்பம். அதிலொருவராக இருக்கும் நாயகன், எப்படி அந்த பகுதியில் இருக்கும் ஒரு ரவுடியைப் பகைத்துக் கொள்ளும் சந்தர்ப்பச் சூழலுக்கு ஆளாகிறார் என்பதுதான் ‘தமிழ்’ படத்தின் முதல் பாதி.

அதன் இரண்டாம் பாதி முழுக்க, அவர் இன்னொரு ரவுடியாக மாறிவிடக் கூடாது என்று பார்வையாளர்கள் பதற்றப்படும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

மலையாளத்தில் சிபி மலயில் இயக்கிய ‘கிரீடம்’ படத்தின் தாக்கத்தில், ‘தமிழ்’ படத்தை ஹரி இயக்கியதாக அவரே பேட்டியளித்திருக்கிறார்.

பாடல்கள், சண்டைக்காட்சிகள் தவிர்த்து வசனப் பகுதிகள் முழுக்க நிறைந்து வழியும் யதார்த்தம் அதனை உண்மை என்று சொல்லும்.

ஏனென்றால், கிரீடம் படத்தின் சிறப்பம்சமே யதார்த்தம் போன்று தோற்றமளிக்கும் திரைக்கதையில் ஆக்‌ஷனைப் புகுத்தியதுதான்.

‘தமிழ்’ படத்தின் முக்கியக் காட்சிகள் பல இயல்பான லொகேஷன்களில் படமாக்கப்பட்டவை. மதுரையை மையமாகக் கொண்ட கதை என்பதால், அந்த சுற்றுவட்டாரப் பகுதிகள் வசனங்களிலும் காட்சிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அது திரைக்கதை மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகமாக்கியது. அதனைப் புரிந்துகொண்ட காரணத்தால், அடுத்தடுத்த படங்களில் கதை நிகழும் களம் ஏதேனும் ஒரு வட்டாரத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார் ஹரி. சமீபத்தில் வெளியான ‘யானை’ வரை அந்த வழக்கத்தைத் தொடர்கிறார்.

இன்றைய சூழலில் முழுக்க முழுக்க யதார்த்தமான சினிமா என்று ஆவணப் படங்களைக் கூடச் சொல்ல முடிவதில்லை. காரணம், அவை கூட அழகுற உருவாக்கப்படுகின்றன.

அப்படியிருக்க, ‘தமிழ்’ படத்தில் முழுக்க யதார்த்தம் மிளிர்வதாகச் சொல்ல முடியாது. ஆனால், கண்ணால் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை அந்த திரைக்கதை ஏற்படுத்தும்.  அதுவே அப்படத்தின் மாபெரும் பலம்.

‘சாமி’ முதல் ‘யானை’ வரை, ஹரி இயக்கிய பின்னாளைய படங்களில் அந்த உணர்வைப் பெற முடியவில்லை என்பதே உண்மை.

அனைவருக்கும் முக்கியத்துவம்!

‘சாமி’, ‘அருள்’, ‘சிங்கம்’, ‘ஆறு’ போன்ற ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொண்ட ஹரியின் படங்களில் ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும்.

‘கோவில்’, ‘தாமிரபரணி’ போன்ற செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய நியாயங்களோடு திரையில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

அதாவது, ‘எனக்கு நானே ராஜா அல்லது ராணி’ என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நினைப்பதை சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் சின்னச் சின்ன வசனங்கள், உடல் அசைவுகளில் தெளிவுபடுத்திவிடும். ‘தமிழ்’ படத்தில் இவ்விரண்டு அம்சங்களுமே நிறைந்திருக்கும்.

வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாயகன் தனித்துவமான குணாதிசயங்களோடு இருப்பார்.

தந்தையின் அரவணைப்பில் வளரும் நாயகி, மிக நல்லவன் என்று ஒரு ஆணை எப்போது சந்திப்போம் என்ற எண்ணத்துடன் இருப்பார்.

ஊரையே மிரட்டும் பெரியவரோ, தனது ரவுடித்தனத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படுவதில்லையே என்றிருப்பார்.

நாயகனுக்கு ஆதரவு கொடுக்கும் இன்னொரு ரவுடியோ, நண்பனின் சகோதரனைக் காப்பாற்றத் தன் தலையைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்.

நாயகனின் எதிர்வீட்டில் குடியிருக்கும் நண்பராக வரும் வடிவேலுவின் பாத்திரம் தொடங்கி சார்லி, சிசர் மனோகர் ஏற்ற பாத்திரங்கள் வரை ஒவ்வொருவரின் பார்வையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அடுத்தடுத்த படங்களில் செயற்கைப்பூச்சை வாரியிறைத்து மேற்சொன்ன சிறப்பம்சத்தைத் தவறவிட்டுவிட்டார் ஹரி. கமர்ஷியல் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அதனைக் கைக்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார் ஹரி.

‘தமிழ்’ படத்தில் நாயகன் தொடர்பான காட்சிகள் யதார்த்தமான ட்ரீட்மெண்டுடன் நகரும்; அதற்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல் சார்லி, சிசர் மனோகரின் நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும்.

சிம்ரன், பிரசாந்த் தோன்றும் பாடல் காட்சிகள் முற்றிலும் வேறு நிலப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும்.

கதையில் மோதல் நிகழும் இடங்கள், அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் தினசரி வாழ்வோடு தொடர்புடையதாக இருந்தாலும், சண்டைக்காட்சிகள் மிகையான புனைவாகவே இருக்கும்.

அவற்றையெல்லாம் மீறி, நாயகன் பாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்றும் வகையில் திறம்பட படத்தை வடித்திருப்பார் ஹரி.

ஹரியின் தனித்துவம்!

சென்னை ஏர்போர்ட்டில் இருந்து சொக்கம்பட்டிக்கு எப்படி வந்தேன் என்று ‘வேல்’ படத்தில் சூர்யா வசனம் பேசுவாரே, அது போல ஹரியின் படங்களனைத்தும் ‘பரபர’ திரைக்கதைக்காகவே கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு விதை போட்டதும் ‘தமிழ்’ படம் தான்.

இந்த படத்தில் நாசரின் மகள் தன் காதலரோடு ரயிலில் ஏறிச் செல்வதாக ஒரு காட்சி உண்டு. எதிரிகளால் அப்பெண் கடத்தப்பட்டார் என்பதை உணரும் நாயகன் பிரசாந்த், மிகக்கூர்மையாகச் சிந்தித்து அவரை மீட்டு வருவார்.

அந்த காட்சிக்கோர்வை செயற்கையாகத் தெரிந்தாலும், திரைக்கதை நகரும் வேகத்தில் மனம் அதை மறந்துபோகும்.

அந்த நுட்பத்தையே இன்றும் தனது பலமாகக் கொண்டிருக்கிறார் ஹரி. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அந்த நுட்பத்தைத் தெலுங்கு படங்களில் அடித்து துவைத்துவிட்டார்கள்.

‘தமிழ்’ படத்தின் ஒரு பிரேமில் கூட, கதை நிகழும் களத்தை பறவைப்பார்வையில் பிரமாண்டமாக காட்டவில்லை ஹரி.

படத்தின் பட்ஜெட்டும், அப்போதிருந்த படமாக்கும் விதமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால், ‘சாமி’ முதலே அவ்வழக்கத்தைத் தொடர்ந்து வருகிறார் ஹரி.

‘தமிழ்’ போன்ற இன்னொரு கமர்ஷியல் படத்தில் இதுவரை பிரசாந்த் நடிக்கவில்லை. ஹரியும் கூட, அதே போன்றதொரு படத்தை இன்றுவரை இயக்கவில்லை.

ஆனால், அதே பாணியிலமைந்த ‘தடையறத் தாக்க’, ‘பொல்லாதவன்’, ‘பாண்டிய நாடு’, ‘மெட்ராஸ்’ போன்ற படங்கள் அவற்றின் தனித்துவமான கதையமைப்பைத் தாண்டி யதார்த்தமான ட்ரீட்மெண்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்‌ஷனுக்காகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

ஆனால், தமிழில் அந்த வகையறா படங்கள் குறைவு.

அந்த ஒரு காரணத்தாலேயே, ‘தமிழ்’ போன்ற திரைப்படங்கள் காலம் கடந்தும் மிகச்சில ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அதற்காகவே, இது போன்ற பல படங்களைத் தர இயக்குனர் ஹரி முன்வர வேண்டும்.

– உதய் பாடகலிங்கம்

அருள்ஆறுஆஹாசாமிசிங்கம்தமிழ்யானைஹரி
Comments (0)
Add Comment