வாசிப்பு அனுபவம் :
“மனித இனம் ஒரு நெருக்கடி நிலையை அடைந்திருக்கிறது என்றும், அதன் உறுதி சீர்குலைந்து படுமோசமான நிலை வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் இப்போது குரல் எழுப்பி வருகிறார்கள்.
இன்று தனிமனிதன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திடம் அக்கறை காட்டாதது ஒருபுறமிருக்க, அதற்கு எதிராகவும் திரும்பிவிடுவது அந்த நெருக்கடியை எடுத்துக் காட்டுகிறது..
அந்தச் சமூகம் பெரியதா? சிறியதா? என்பதைப் பற்றிய பிரச்சினையே அல்ல இது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத நிலை எங்கும் பரவிவிட்டது.
எனது அனுபவத்திலிருந்தே இதற்கு ஒரு உதாரணம் கூற முடியும்.
மீண்டும் ஒருமுறை போர் வந்தால், மனிதப் பூண்டு கூட எஞ்சி நிற்காது என்பது என் கருத்து.
இதைப் போன்ற விபரீத நிலையிலிருந்து, மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், நாடு, இனம் போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பினால் தான் முடியும்.
இதைப்பற்றி நான் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சிறந்த அறிவாளி. நல்லவர்.
“மனித இனம் அடியோடு அழிந்து போனால் உங்களுக்கென்ன? அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புக் காட்டுகிறீர்கள்?’’ என்று அமைதியாகக் கேட்டார்.
நூறு ஆண்டுகளுக்கு முன் யாரும் இவ்வளவு அலட்சியமாகக் கேட்டிருக்க மாட்டார்கள். சமூகத்துடன் ஒத்து வாழும் சமநிலைப் பெறுவதற்கு இயன்றவரை முயற்சித்து, ஏறக்குறைய முழுமையாக அதில் தோற்றுவிட்ட ஒருவருடைய வார்த்தைகள் அவை.
மனம் நொந்த தனிமையில், உறவுப் பிணைப்புக்கள் எதுவும் இன்றி வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒருவருடைய பேச்சு இது.
இதைப் போன்ற நிலையில் இன்று கோடிக்கணக்கான மக்கள் இருந்து வருகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? மனிதனை இதிலிருந்து மீட்க வழி என்ன?
இதைப் போன்ற கேள்விகளைக் கேட்பது சுலபம். பதில் அளிப்பது தான் கஷ்டம். தைரியமாக எதையும் சொல்வதற்கு இல்லை.
ஆயினும் முயற்சித்து விடை காண விரும்புகிறேன்.
நமது உணர்ச்சிகளிலும், முயற்சிகளிலும் நம்மையும் அறியாமல் முரண்பாடுகள் இருக்கின்றன. சுலபமான எளிய சூத்திரங்களாக அக்கேள்விகளுக்கு விடையளித்துவிட முடியாது.
இதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்த போதிலும் அவற்றிற்கு ஒரு வழி கண்டு பிடித்தே தீர வேண்டும்’’
‘ஜனநாயக சோஷலிசம்’ என்ற தலைப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் எழுதிய சிறு வெளியீட்டிலிருந்து ஒரு பகுதி
வெளியீடு: ‘சமுதாயம் பிரசுரலாயம்’ கோவை.