சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பேராசிரியர் ஹரிபத்மனை அடையாறு மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கையை முதன்மை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் செய்தித் தாள்களில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
அதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி மகேந்திரகுமார் ரத்தோர் தலைமையில் விசாரணை குழுவை அமைத்த மனித உரிமைகள் ஆணையர், இக்குழு 6 வார காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஐஜி தலைமையிலான அதிகாரிகள் இன்று கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி, துணை இயக்குனர், பத்மாவதி, முதல்வர் பலக ராம்தாஸிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
தேர்வு முடிந்தவுடன் அடுத்த வாரம் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று மனித உரிமைகள் ஆணைய காவல்துறை தெரிவித்திருக்கிறது.