தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது.
அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ஒன்று, அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்சியான நம்பர் பிளேட்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த ஏலத்தில் ஏகப்பட்ட நம்பர் பிளேட்கள் இடம்பெற்றன.
இதில், ஏஏ19 என்ற நம்பர் பிளேட் 4.9 மில்லியன் திராம்ஸ்க்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ10.92 கோடிக்கு ஏலம் போனது.
அடுத்ததாக ஓ 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ4.79 கோடிக்கு ஏலம் போனது. கியூ 22222 என்ற நம்பர் பிளேட் 975,000 திராம்ஸ், அதாவது ரூ 2.17 கோடிக்கு ஏலம் போனது.
இந்நிலையில், 33 கோடி ரூபாய் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த P-7 என்ற நம்பர் பிளேட், இறுதியில் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
கடந்த 2008-ம் ஆண்டு, அபுதாபியில், ஒன்றாம் எண் நம்பர் பிளேட் ஒன்று 116 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே உலகளவில் அதிகபட்சமாக இருந்தது. இந்த ஏல நிகழ்ச்சி மூலம் மொத்தம் 220 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.