ஒரு சராசரி பெண்ணுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு தேச விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கஸ்தூரிபா காந்தி.
இதற்கு, அவரின் கணவரான மகாத்மா காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் முக்கியக் காரணம்.
காந்தியடிகளின் நிழலாகவே தன் வாழ்நாள் முழுவதும் உறுதுணையாய் இருந்தார் அவர். நாட்டின் விடுதலைப் போராட்டங்களில் காந்தியடிகளுடன் இணைந்து தம்மை அர்ப்பணித்தவர்.
காந்தி – கஸ்தூரிபா தம்பதியினரின் வாழ்க்கையில் சிறை வாழ்க்கையும் உடல்நலக் கோளாறுகளும் புதிதல்ல. 1908-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாட்டில் காந்தி முதன்முறையாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கஸ்தூரிபாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாகிவிட்டார். அப்போது சிறையில் இருந்த காந்தி, கஸ்தூரிபாவுக்கு எழுதிய கடிதம் வரலாற்றின் பக்கங்களில் மிக முக்கியமானது.
காந்தி எனும் ஆளுமை பொது வாழ்க்கைக்காகத் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அப்போதே விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்ததையே அது காட்டுகிறது.
தென்னாப்பிரிக்காவின் வோல்கிரஸ்ட் சிறைச்சாலையிலிருந்து 1908-ம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி காந்தி, கஸ்தூரிபாவுக்கு அனுப்பிய கடிதத்தில்…
“உன் உடல்நிலை குறித்து அறிந்துகொண்டு மிகவும் வருந்தினேன். நான் உன்னைப் பார்க்க சிறையிலிருந்து வெளியே வருவது சாத்தியமே இல்லாத ஒன்று.
அப்படியே வெளியே வர வேண்டுமெனில் பிணை அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினேன் என்றால் நான் போராடியதற்கான அர்த்தமே இல்லாமல் ஆகிவிடும். சரியான உணவும் மன உறுதியும் உன்னை நிச்சயம் பிழைக்கச் செய்யும்.
ஒருவேளை துரதிஷ்டவசமாக நீ இறந்துவிட்டால், என்னைத் தனியாகப் பூமியில் விட்டுச் செல்வதற்காக வருந்தாதே. உன் உயிர் பிரிந்தாலும் நீ எனக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்.
உன் ஆன்மாவுக்கு அழிவே கிடையாது. உன் மரணம் மகத்தான இந்தச் சத்தியாகிரகப் போராட்டத்துக்கான தியாகம் என நினைத்துக்கொள்.
நம் போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல. உணர்வு ரீதியானது. உயிரெல்லாம் இந்தப் போராட்டத்தில் ஒரு பொருட்டல்ல. எனவே, உன் நிலை கண்டு துயரப்படாமல் மகிழ்வுடன் இருப்பாயாக!” என்று எழுதியிருந்தார்.
காந்தியின் விருப்பப்படியே சிகிச்சையால் மரணப்படுக்கையிலிருந்து கஸ்தூரிபா மீண்டெழுந்துவிட்டார்.
காந்தியின் சொற்களில் உறுதியும் வலிமையும் பெற்ற கஸ்தூரிபா 1913-ம் ஆண்டிலேயே தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகப் போராடிக் கைதானார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி, சத்யாகிரகப் போராட்டங்களிலும் தேச விடுதலைப் போராட்டங்களிலும் காந்தியுடன் இணைந்து கலந்துகொண்டார்.
கஸ்தூரிபாயின் பங்களிப்பு அன்றைய இந்தியச் சமூகத்தில் பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்றைய நாள்களில் சின்னஞ்சிறு கிராமங்களில் இருந்தும்கூட எளிய பெண்கள் உணர்வெழுச்சியுடன் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதற்கு, ‘காந்தியின் மனைவியே போராடுகிறார்’ எனும் பிம்பம் நிச்சயம் ஒரு காரணமாக அமைந்தது.
ஒருமுறை, காந்தி தண்டியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டபோது அவர்களின் மருமகள் அழத் தொடங்கிவிட்டார். அப்போது கஸ்தூரிபா கூறிய சொற்கள் அவரது ஆளுமைக்கு ஒரு சான்று.
“ஆண்கள் வீரர்கள்; நாம் வீரர்களின் மனைவிகள். நாம்தான் ஆண்களுக்குத் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். நாம் தைரியமாக இருந்தால்தான் ஆண்களும் தைரியமாக இருப்பார்கள்.”
காந்தியால் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத பல போராட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் கஸ்தூரிபா முன்னின்று நடத்தியிருக்கிறார்.
1923-ம் ஆண்டு போர்சந்த் நகரத்திலும் 1928-ம் ஆண்டு பர்தோலி நகரத்திலும் நடைபெற்ற சத்யாக்கிரகப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் கஸ்தூரிபாதான்.
‘மெட்ராஸ் ஹரிஜன் சேவா சங்கம்’ எனும் அமைப்பின் அழைப்பை ஏற்று காந்திக்குப் பதிலாகக் கஸ்தூரிபா தமிழகமெங்கும் தீண்டாமைக்கு எதிராக ஊர் ஊராகப் பிரசாரம் மேற்கொண்டார்.
தான் சென்ற இடங்களில் எல்லாம் பெண்களைப் போராட்டக்களத்தை நோக்கி அவர் அழைத்துக்கொண்டே இருந்தார்.
குறிப்பாக, பர்தோலி நகரத்தில் நடைபெற்ற போராட்டக்களம் அன்றைய தேதியின் தேசிய அளவில் பெண்கள் அதிகமாகக் கலந்துகொண்ட ஒரு போராட்டமாகும்.
வாழ்க்கை முழுதும் பல போராட்டங்களையும் சிறைத்தண்டனைகளையும் கண்டிருந்த கஸ்தூரிபா, 1942-ம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கைதானார்.
பூனாவில் சிறை வைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் கடுமையான பாதிப்புக்குள்ளானார். மக்கள் சேவையில் இடையறாது ஈடுபட்டு உழைத்ததால், உடல்நிலையில் போதிய கவனம் செலுத்தத் தவறினார். 1944-ம் ஆண்டு சிறையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
தன் கடைசி நாள்களில் “நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும்” என யாராவது வாழ்த்தினால்கூட, “இல்லை. என் நேரம் முடிந்துவிட்டது” என்றே கஸ்தூரிபா தன் மரணத்தைக் கணித்திருந்தார்.
கஸ்தூரிபாவின் உடல் நிலையைக் கண்டு துயரம் கொண்ட காந்தி, மனைவிக்குக் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளையும் சிகிச்சைகளையும் நிறுத்தி விடும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரால் கஸ்தூரிபா படும் கஷ்டத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களும் காந்திஜியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக வரலாற்றில் ஒரு தகவல் உண்டு.
அதேபோல, இயற்கை மருத்துவத்தையே காந்தி விரும்பியதாகவும் ஆங்கில வழி சிகிச்சையை கஸ்தூரிபாய்க்கு அவர் கொடுக்க மறுத்ததாகவும் ஒரு விமர்சனம் உண்டு.
எது எப்படியோ, வரலாற்றின் பார்வையில் கஸ்தூரிபாய் எனும் ஆளுமையை முன்னிறுத்திப் பார்த்தோம் என்றால், தேச விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு வேறெந்த சுதந்திரப் போராட்ட வீரருக்கும் குறைவானதல்ல.
– நன்றி: ஆனந்த விகடன்