நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
இந்த அமர்வின் முதல் நாளில், வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை பாஜக எழுப்பியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதற்கு பதிலடியாக, அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர்.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கின. மேலும் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முழுமையாக நடைபெறவில்லை. கடந்த 15 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தன.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்றும் லோக்சபாவில் தொடர்ந்து அமளி நீடித்தது. காங்கிரஸ் எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து வந்தனர். லோக்சபா தொடங்கிய உடன் சில காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர்.
சிலர் தங்களது இருக்கைகள் மீது நின்று முழக்கங்களை எழுப்பினர். மேலும் சில எம்பிக்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்று முழக்கமிட்டனர்.
இத்தகைய அமளி தொடர்ந்து நீடித்ததையடுத்து லோக்சபா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை இன்று காலை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முழுவதுமாக முடங்கியது. இதனால் ரூ.140 கோடி மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.