எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?

– கோபப்பட்ட எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் அன்று தமிழகத்தின் முதல்வராகச் சட்டமன்றத்தில் வீற்றிருந்தார்.
பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வரவேண்டும் என்று அவர் விரும்பினார்.

அதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருந்தவர் கலைஞர். அவருக்கு அருகில் பேராசிரியர் அன்பழகன்.

அந்த மசோதாவை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்தது. பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்குவதன் மூலம் 24 ஆயிரம் குடும்பங்களின் வீட்டு விளக்குகளை அண்ணா தி.மு.கழகம் அணைத்து விட்டது என்று குற்றம் சாட்டினார் கலைஞர்.
அனல் பறக்கும் விவாதம் தொடர்ந்தது.

அ.தி.மு.க வரிசையில் அற்புதமாக வாதிடும் திறமை பெற்றிருந்தவர்களில் வி.பி.பாலசுப்பிரமணியமும் ஒருவர். வேட சந்தூர் சட்டமன்ற உறுப்பினர். அவர் எழுந்தார்.

“பழைய பரம்பரை கிராம அதிகாரிகளை நீக்கிவிட்டு, புதிய கிராம அதிகாரிகளை நியமிக்கும் உத்தரவு 1971 ஆம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவைப் போட்டது தி.மு.கழக அரசு தான். அன்றைய முதல்வர் கருணாநிதி தான்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

“புதிய கிராம நிர்வாக அதிகாரிகளை நியமிக்க கருணாநிதி போட்ட நிர்வாக உத்தரவுக்குத் தான் அ.தி.மு.க அரசு சட்ட வடிவம் தருகிறது. அதை தி.மு.க எதிர்ப்பது என்ன நியாயம்?” என்று பாலசுப்பரமணியம் தன்னுடைய உரையை முடித்தார்.

அவை முடிந்ததும் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. அவருடைய வாதத் திறமையை அமைச்சர்களும் மெச்சினர்.

அவைக்கு அருகில் இருந்த வசந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘தலைவர் நம்மைப் பாராட்டப் போகிறார்’ என்று பாலசுப்பரமணியம் எதிர்பார்த்திருக்கக் கூடும்.

அவையில் பாலசுப்பரமணியத்தின் பேச்சை வரவேற்றாலும் எம்.ஜி.ஆர் தனியாக அவரைக் கண்டித்தார்.

“தக்க சமயத்தில் தக்க விளக்கம் தந்தாய். ஆனால் மூச்சுக்கு முந்நூறு தரம் கருணாநிதி, கருணாநிதி என்று அவர் பெயரைச் சொல்லி அழைத்தாயே! அவருடைய வயது என்ன? உன் வயது என்ன? அவருடைய அரசியல் அனுபவம் என்ன? உன் அனுபவம் என்ன?” என்று எம்.ஜி.ஆர் அக்கினிச் சொற்களை அள்ளி வீசினார்.

பாலசுப்பரமணியம் ஆடிப்போய் விட்டார்.

“நீங்கள் என்னை தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்ட எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?” என்று கேட்டபோது எம்.ஜி.ஆரின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.”

– மூத்த பத்திரிகையாளரான சோலை எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.

நன்றி : 27.12.1998 ஆனந்தவிகடன் வார இதழ்

Comments (0)
Add Comment