இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு கடந்த ஒருவருடமாகத்தான் குறைந்து இருந்தது.
தற்போது கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 3,593 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,97,118 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் 105 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 909 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. சென்னையில் 63 பேரும், செங்கல்பட்டில் 25 பேரும், கன்னியாகுமரில் 16 பேரும், சேலத்தில் 10 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த 82 வயதான சுப்பிரமணியன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மனைவி பழனாத்தாள் என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.