இன்றைய வாசிப்பு :
கைரேகைச் சட்டம் என்று அழைக்கப்பட்ட ‘குற்றப் பரம்பரை’ச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்திருந்தது. அந்தச் சட்டத்தை அமல்படுத்த மக்களிடம் கைரேகை பதிக்க வைக்க முயன்றது அரசு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள பெருங்காம நல்லூர் கிராமத்திற்குள் நுழைந்தது ஆங்கிலேயப்படை. நூற்றுக்கும் அதிகமான காவலர்கள். அவர்களின் கைகளில் ஆயுதங்கள்.
சட்டத்தை அமல்படுத்த அங்கிருந்த கிராமத்து மக்களைக் கைரேகை பதிக்க வற்புறுத்தினார்கள் அதிகாரிகள்.
“எங்கள் கிராமத்தில் குற்றம் இழைத்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அவர்களை நாங்களே பிடித்து உங்களிடம் ஒப்படைக்கிறோம்.
அதைவிட்டுவிட்டு, புதிதாக ஒரு சட்டத்தைப் போட்டு, ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் அனைவரும் அடிபணிந்து, அதற்குச் சம்மதித்துக் கைரேகை வைக்க வேண்டும் என்று வற்புறுத்துவது எந்தவகையில் நியாயம்?
இந்தச் சட்டம் குற்றச்செயல்களில் ஏதும் ஈடுபடாத அப்பாவி மக்களையும் கொடுமைக்கு உள்ளாக்கி குற்றவாளிகளாகப் பாவித்து, நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது’’ என்று அதிகாரிகளிடம் வாதிட்டார்கள் கிராமத்தில் இருந்த பெரியவர்கள்.
மூன்று மணி நேரத்திற்கு மேல் விவாதம் நீண்டது.
முடிவில் அந்த நிராபராதியான மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட உத்தரவைப் பிறப்பித்தனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
துப்பாக்கிச் சூட்டிற்கு அந்த இடத்திலேயே 13 அப்பாவிகள் உயிரிழந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த குண்டடி பட்டவர்களுக்கு வீட்டிலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, மாயக்காள் என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்.
பெருங்காம நல்லூர் என்கிற கிராமத்தில் உயிரிழந்த வீரத் தியாகிகளில் நினைவு தினம் இன்று.
– ‘தினமணி’ 2020 ஏப்ரல் 3 அன்று தினமணி நாளிதழில் வெளியான வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி : தினமணி